ஜார்கண்ட் மாநிலத்தின் 11ஆவது முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அம்மாநிலத்தில் சுரங்கங்களை ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யுமாறு அம்மாநில ஆளுநர் ரமேஷ் பைஸிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இந்தநிலையில் அங்கு அரசியல் சூழல் எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் உள்ளார். இவர் தமது பதவி பறிக்கப்பட்டால் லாலு ஸ்டைலில் தமது மனைவி கல்பனாவை முதலமைச்சர் ஆக்கலமா ? என யோசித்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையே எதிர்கட்சியான பாரதிய ஜனதா இப்போதுள்ள அசாதரமான சூழலை பயன்படுத்தி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன் குதிரை பேரம் நடத்துவதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த ஹேமந்த் சோரன் தமது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மேற்கு வங்கம் அல்லது பீகாரில் உள்ள ரெசார்ட்டில் தங்க வைக்க முடிவு செய்துள்ளார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 81 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் 49 எம்.எல்.ஏ.,க்கள் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சியை ஆதரித்து வருகின்றனர். இதில் 30 பேர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்தவர்களும், 18 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். மற்றொருவர் ஆர்ஜேடி கட்சியை சார்ந்தவர் ஆவார். 26 பேர் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர்.
இதுகுறித்து பேசிய ஹேமந்த் சோரன், ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் முயற்சியில் ஜனநாயக விரோத சக்திகள் இறங்கியுள்ளன. மக்கள் ஆதரவோடு இதனை தமது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவேன் எனக் கூறினார். ஹேமந்த் சோரனின் சட்டமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லவுள்ளதாக அவரது கட்சி அறிவித்துள்ளது. அவர் மீதுள்ள குற்றச்சாட்டே சட்டவிரோதமாக ஜார்கண்ட் மாநிலத்தில் சுரங்கங்களை தமது சொந்த நிறுவனத்திற்கே அவர் ஒதுக்கியுள்ளார் என்பதாகும்.
இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என பாஜக கருத்து தெரிவித்துள்ளது. இப்படி தமது பெயருக்கு டென்டரை ஒதுக்கி இருப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (1951) விதிகள் 9ன் படி குற்றம் எனவும், அச்சட்டத்தின் கீழ் அவர் பதவியை பறிக்க தேர்தல் ஆணையம் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது எனவும் பாஜக கூறி வருகிறது. தேர்தல் ஆணையம் ஆளுநருக்கு எழுதிய ரகசிய கடிதம் குறிப்பிட்ட சில மீடியாக்களுக்கும், பாரதிய ஜனதா நிர்வாகிகளுக்கும் கசிந்திருப்பதன் மூலம், இது ஜனநாயக விரோத செயல் என சோரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது ஒருபுறமிருக்க அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறிய ஹேமந்த் சோரன் தார்மீக அடிப்படையில் தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக கோரி வருகிறது. மேலும், ஆட்சியை கலைத்துவிட்டு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் எனவும் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இராமானுஜம்.கி









