“ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறியது” – 6 பேர் விடுதலை குறித்து ஓபிஎஸ் கருத்து

பேரறிவாளனை தொடர்ந்து நளினி உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு வி.கே.சசிகலா, ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.   ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை…

பேரறிவாளனை தொடர்ந்து நளினி உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு வி.கே.சசிகலா, ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன்பு விடுதலையானார். அதேபோல், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரை இன்று விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிவாளனை தொடர்ந்து, தற்போது 6 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். 30 ஆண்டுகள் அவர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்த நிலையில், இன்று அதற்கு நல்ல முடிவு கிடைத்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளால் இன்று நல்ல தீர்வு கிடைத்திருப்பதாகவும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் சுதந்திர காற்றை சுவாசிக்க இருக்கும் அனைவரும் சந்தோசத்தையும், நிம்மதியையும் பெற எல்லாம் வல்ல இறவைனை வேண்டிகொள்வதாகவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனை தொடர்ந்து, சாந்தன், முருகன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 6 பேரையும் இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதன்மூலம் ஜெயலலிதாவின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது. இது அதிமுகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இதனை வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பேரறிவாளனைத் தொடர்ந்து எஞ்சிய 6 தமிழர்களின் நீண்ட சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார். சிறையிலிருந்து வெளிவரவிருக்கும் அவர்கள் புதியதோர் வாழ்வைத் தொடங்க வாழ்த்துகள் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.