6 பேர் விடுதலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது- காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த 6 பேரின் விடுதலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி…

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த 6 பேரின் விடுதலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை கடந்த மே மாதம்,  142வது சட்டப்பிரிவை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில் இன்று இந்த தீர்ப்பை மேற்கோள்காட்டி, நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 6 பேரை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

இந்நிலையில் 6 பேர் விடுதலையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தவறானது என்றும் கூறியுள்ளார். 6 பேர் விடுதலைக்கு எதிராக உறுதியான கருத்தை காங்கிரஸ் கொண்டிருப்பதாக கூறியுள்ள ஜெய்ராம் ராமேஷ், இதனை முற்றிலும் நியாயப்படுத்த முடியாததாகவும் காங்கிரஸ் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், 6 பேரும் நிரபராதிகள் எனக்கூறி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படவில்லை என்றும், அவர்களின் விடுதலையை யாரும் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். விடுதலை செய்யப்பட்ட 6 பேரும் ஹீரோக்கள் அல்ல எனவும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.