மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரை வாழ்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள அதிமுகவினர், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிலையில், ஜெயலலிதாவை புகழ்ந்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளில், அவர் நம்முடன் இல்லையே என்ற வருத்ததோடு அவரை நினைவுபடுத்திக் கொள்கிறேன். ஜெயலலிதாவைப் போன்று மற்றொரு பெண்மணியை பார்க்கவே முடியாது. அவருடைய அழகு, கம்பீரம், அறிவு, துணிச்சல், ஆளுமை வேறு யாருக்கும் வராது.
இதையும் படியுங்கள் : பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்! – இயக்குநர் வெங்கி அட்லூரி
எம்ஜிஆர்-க்கு புரட்சித் தலைவர் என்ற பெயர் வருவதற்கான காரணத்தை அனைவருமே அறிந்திருப்போம். ஒரு நடிகராக அறிமுகமாகி, ஒரு மாநிலத்தில் கட்சி ஆரம்பித்து, ஆட்சியை பிடித்து, முதலமைச்சரானவர் எம்ஜிஆர். இது மிகப்பெரிய புரட்சி. அவரது மறைவுக்குப் பின்னர் அந்த கட்சியில் பிளவு உண்டானது.
அப்போது அக்கட்சியில் மிகவும் திறமையான அனுபவசாலியான தலைவர்கள் இருந்தனர். ஆனால், ஒரு தனி பெண்ணாக அந்த பிளவுபட்ட கட்சியை ஒன்றாக்கி, கூடுதல் பலப்படுத்தி மிகப்பெரிய கட்சியாக மாற்றி, பல ஆண்டுகள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் ஜெயலலிதாவை மதித்தனர். அவரது திறமையை பார்த்து வியந்தனர்.
ஒருமுறை எனக்கும், ஜெயலலிதாவுக்கும் இரு சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டது. அவருக்கு எதிராக பேச வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்குப் பின்னர் எனது மகள் திருமணத்துக்கு அவரை அழைத்தபோதும், நான் பேசியதை எல்லாம் மறந்து, என்னுடைய மகள் திருமண விழாவில் கலந்து கொண்டு, திருமணத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுத்தார். அவ்வளவு கருணை உள்ளம் கொண்டவர் ஜெயலலிதா. அவரது பெயரும் புகழும் என்றென்றும் வாழ்க!” என்று தெரிவித்தார்.







