ஜெயலலிதாவின் தொண்டர்கள் கூட்டணியில் இணைந்து செயல்பட்டால் தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக ஆட்சிக்கு வந்ததற்கு, எடப்பாடி பழனிசாமியே காரணம். எடப்பாடி பழனிசாமியின், செயல்படுத்த முடியாத வாக்குறுதியால் அதிமுக ஆட்சியை இழந்துள்ளது. அவருக்கு தற்காலிக வெற்றியே கிடைத்துள்ளது. துரோகிகள் கைகளில் இரட்டை இலை சின்னம் இருப்பதால் சின்னம் பலவீனம் அடைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அம்மாவின் தொண்டர்களாக நாம் அனைவரும் ஓர் அணியில் செயல்பட்டால் தான் நாடாளுமன்றத்தில் அதிமுக வெல்ல முடியும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவி வகித்தாலும், அதிமுக ஜொலிக்க வாய்ப்பில்லை. நாடாளுமன்ற தேர்தலில் என் தலைமையில் (அமமுக) கூட்டணி இருக்காது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், குப்பனோ சுப்பனோ கூட 4.5 ஆண்டுகள் ஆட்சியை நடத்த முடியும். இதில் பழனிசாமிக்கு எந்த பெருமையும் இல்லை. மத்திய அரசின் உதவியுடன் தான் அந்த ஆட்சியையும் அவர் நடத்தினார்.
இதையும் படியுங்கள் : புதுக்கோட்டையில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம்!
இரட்டை இலை சின்னம் இருந்தும் நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறவில்லை. திமுக ஆட்சிக்கு வருவதற்கு பழனிசாமியின் ஆணவமும், பணத் திமிரும் தான் காரணம். ஜெயலலிதா ஆட்சியை, அவரால் தக்க வைக்க முடியவில்லை.
வன்னியர் சமுதாய மக்களை எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றினார். அதனால் தான் அவரால் தென் மாவட்டங்களில் ஜெயிக்கவே முடியவில்லை. பசும்பொன் தேவர் நினைவிடம் கூட அவரால் வர முடியவில்லை. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும். திமுகவை எதிர்க்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும். சுவாசம் உள்ளவரை ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர போராடுவோம்” என்று தெரிவித்தார்.