எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்புவது குறித்து இன்று முடிவு செய்கிறது ஆறுமுகசாமி ஆணையம்.
ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017ஆம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. போயஸ் இல்ல பணியாளர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்பல்லோ நிர்வாகம் தொடர்ந்த வழக்கால், இடையே ஆணையத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அது கடந்த மாதம் விலக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து வருகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், கடந்த மாதம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று தனக்கு தெரியாது எனவும், ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை எனவும் விளக்கம் அளித்தார்.
இதனிடையே எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி ஆறுமுகசாமி ஆணையத்தில் மனு அளித்தார். புகழேந்தி மனு மீதான விசாரணை நிதியரசர் ஆறுமுகசாமி முன்னிலையில் இன்று நடைபெறுகிறது. சசிகலா தரப்பு, ஆணைய தரப்பு, அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் இன்று ஆஜராகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கலாமா ? வேண்டாமா என்பதை ஆறுமுகசாமி ஆணையம் இன்று முடிவு செய்கிறது.







