ஜல்லிக்கட்டை ரேக்ளா பந்தயத்தோடு ஒப்பிட கூடாது; தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டோடு கலந்த ஜல்லிக்கட்டை, மகாராஷ்டிராவில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தோடு, ஒப்பிட கூடாது என தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சட்டம் இயற்றி நடத்துவதுபோல , மகாராஷ்டிராவில் ரேக்ளா…

தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டோடு கலந்த ஜல்லிக்கட்டை, மகாராஷ்டிராவில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தோடு, ஒப்பிட கூடாது என தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சட்டம் இயற்றி நடத்துவதுபோல , மகாராஷ்டிராவில் ரேக்ளா பந்தயத்துக்கு அனுமதி அளிக்கக்கோரி அம்மாநில அரசு மேல்முறையீடு செய்திருந்தது. ரேக்ளா பந்தயம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவின் நகல், தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இதற்கான பதில் மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்தது.

இதில், மகாராஷ்டிராவில் நடைபெறும் ரேக்ளா பந்தயத்தோடு, தமிழ்நாட்டின் ஜல்லிக்கடை ஒப்பிட கூடாது எனவும், ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டோடு கலந்த பாரம்பரிய விளையாட்டு எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், இது மாநிலங்களின் பட்டியலில் வருவதால், அதனை நடத்த சிறப்பு சட்டம் இயற்றப்பட்டதாகவும், ஜல்லிக்கட்டில், எந்த விலங்குகளும் துன்புறுத்தப்படுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வித விதிமீறலும் இன்றி, உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாகவும்,

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகளுக்கு உரிய உணவு வழங்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, தகுதி பெற்றால் மட்டுமே ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் உரிய உடல், மருத்துவ தகுதிக்கான சான்றிதழ் வைத்திருந்தலே அனுமதிக்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ரேக்ளா பந்தயத்துக்கு உரிய விதிகளை பின்பற்றி சிறப்பு சட்டம் இயற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.