தஞ்சை மருத்துவக்கல்லூரி கழிவறையில் பெண் சிசு சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பவத்தில் ஈடுபட்ட கல் நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கழிப்பறையில், நேற்று முன்தினம் பெண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தொப்புள் கொடியுடன் குழந்தை மீட்கப்பட்டதால், பிறந்து சில மணி நேரங்களே இருக்கும் என கருதப்பட்டது.
இதையடுத்து, தகவலறிந்து சென்ற மருத்துவக்கல்லூரி போலீசார் பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். குழந்தையை இங்கு வீசி சென்றவர் யார்? என மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படும் வகையில் சில காட்சிகள் சிக்கியது.
குழந்தையின் தாயே, பெண் சிசுவை கொன்று கழிவறையில் போட்டு சென்றது தெரியவந்தது. பூதலூரை சேர்ந்த பிரியதர்சினி என்ற அந்த பெணுக்கு தவறான நடத்தையால் குழந்தை பிறந்ததால், கல்நெஞ்சத்தோடு கழிவறையில் வீசி சென்றுள்ளார். இதனால் அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெற்றோரையும் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








