முக்கியச் செய்திகள் தமிழகம்

“மதுரையில் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும்“ – அமைச்சர்

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியானது தொடங்கிய நிலையில், மதுரையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “கொரோனா 3ஆம் அலையை கட்டுக்குள் கொண்டு வர பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்து வருகிறார்.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மதுரையில் 3ஆம் அலையை எதிர்கொள்ள அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. மக்களுக்கு தற்போது கொரோனா விழிப்புணர்வுதான் தேவைப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் கிராமம் கிராமமாக சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

மேலும், “மதுரையில் ஜல்லிகட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும். ஜல்லிகட்டு நடத்துவது குறித்து முதலமைச்சர் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளது” என்றும், “அவர் அறிவித்த உடன் போர்கால அடிப்படையில் ஜல்லிகட்டு நடத்த ஏற்பாடு செய்யப்படும்.” என்றும் கூறினார்.

அதேபோல, “ஜல்லிகட்டை விதிமுறைகள் படி நடத்துவது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார். கடந்த காலங்களில் போட்டி நடைபெறலாம் என அறிவித்த 24 மணி நேரத்தில் மதுரையில் ஜல்லிகட்டு நடத்தப்பட்டது” என்றும் அமைச்சர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அதிகாலை மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த முகூர்த்த கால் நடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்து.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசி 3-வது டோஸ் அவசியமா?

Gayathri Venkatesan

10.5% இடஒதுக்கீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்டெடுப்பார்: ராமதாஸ்

Ezhilarasan

நாங்குநேரியில் பார் ஊழியர் மர்ம மரணம்: மனைவியிடம் போலீசார் விசாரணை

Jeba Arul Robinson