முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை கண்டித்து, அதிமுக சார்பில் வரும் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் முக்கிய நீராதாரமான முல்லைப் பெரியாறு அணையில், 152 அடி வரை தண்ணீரை தேக்கிக் கொள்ளலாம் என்ற தீர்ப்பை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டப்போராட்டத்தின் மூலம் பெற்றுத் தந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து, முல்லை பெரியாறு அணையில் 3 முறை 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டதையும், பேபி அணை, சிற்றணை பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததும் 152 அடி வரை தண்ணீரை தேக்கிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள தையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
கேரள அரசு தவறான தகவல்கள் அடிப்படையில் உண்மைக்கு புறம்பாக எழுப்பி வரும் பிரச்சனைகளுக்கு அடிபணிந்த தமிழ்நாடு அரசு, தண்ணீர் 138 அடியை எட்டும் முன்பே, முல்லைப்பெரியாறு அணையை, கேரள அதிகாரிகள் முன்னிலையில் திறந்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை, கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சாட்சிக்கு வைத்துக் கொண்டு திறந்து விடுவது, தமிழ்நாட்டின் உரிமைகளை கேள்விக்குறியாக்கும் செயல் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், திமுக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து, அதிமுக சார்பில், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வரும் 9ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Advertisement: