புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகநாதர் ஆலய ரதயாத்திரை திருவிழா இன்று தொடங்கியது. கொரோனாவை மீறி ஏராளமானோர் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒடிசா, பூரி ஜெகந்நாதர் ஆலய ரதயாத்திரை திருவிழா, உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். லட்சக்கணக்கான பக்தர்களுடன் மிகப் பெரும் கொண்டாட்டமாக நடைபெறும் இந்த ரத யாத்திரை விழா, கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பக்தர்கள் இன்றி நடைபெற்றது. அதே போல இந்த ஆண்டும் பக்தர்களின்றி நடைபெறுகிறது.
ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று காலை தொடங்கியது. இதனை முன் னிட்டு 2 நாள் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வருகிற 13 ஆம் தேதி இரவு 8 மணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வடக்கு பகுதி ஐ.ஜி.பி. நரசிங்க போல் தெரிவித்துள்ளார்.
இருந்தும் கொரோனா கட்டுப்பாடுகளையும் மீறி ஏராளமானோர் இந்த விழாவில் பங்கேற் றுள்ளனர். இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் டாக்டர் ஜெயலால் கூறும்போது, இந்த கடினமான நேரத்தில் எந்த திருவிழாவையும் நடத்துவது நல்லதல்ல, ஏனென்றால் அது ஆபத்தானது. மக்கள் அதிகளவு கூடும் எந்த விழாவையும் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அம்மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ரத யாத்திரையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர், ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.







