கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் இன்று ஜூன் 18ம் தேதி நெட்ஃ பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது .
மதுரை அருகே கிராமம் ஒன்றில் பரோட்டோ கடை வைத்திருப்பவர் சுருளி ( நடிகர் தனுஷ் ). அதுதான் தொழில் என்றாலும் அவ்வப்போது தனது ஆசானாக இருக்கும் தீர்த்தபாலன் அண்ணனுக்காக கொலை கூட செய்யும் லோக்கல் கேங்க்ஸ்டராகவும் வலம் வருகிறார்.
படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே சில அகதிகள்,பிரிட்டன் கடல் எல்லையில் கடலோர காவற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். அதன் பின் வரும் காட்சியில் வில்லன் பீட்டர் “WHITE POWER” என எழுதியுள்ள ஒரு வெள்ளை நிற காரில் இருந்து இறங்கி, அவ்வூரில் உள்ள கறுப்பின இளைஞர்கள் சிலரை தெறித்து ஓட விடுகிறார். அதனை தொடர்ந்து வரும் காட்சியில் படத்தின் கதாநாயகன் சுருளி ஒரு ரயிலை வழிமறித்து தமிழ்நாட்டில் வசிக்கும் வட நாட்டைசேர்ந்த ஒருவரை சுட்டுக்கொன்று தனது கதையை தொடங்குகிறார். இவ்வாறாக படத்தின் முதல் மூன்று காட்சிகளிலேயே இடம்பெயர்ந்தவர்களையும், இனவாதத்தையும், பாசிசத்தையும் பற்றி லேசாக தொட்டுவிட்டு படத்தை தொடங்குகிறார் இயக்குநர்.
ரயிலில் செய்யும் கொலையினால் ஏற்படும் விபரீதங்களுக்கு ஆளாகும் சுருளி, தலைமறைவாவதற்கு தன் நண்பனின் உதவியால் ஒரு மாதம் பிரிட்டன் அழைத்து செல்லப்படுகிறார். ஏற்கனவே அங்கு இரண்டு கேங்க்ஸ்டர்களாக இருக்கும் குழுவினர் நடுவே சிக்கிக்கொள்ளும் சுருளி எப்படி தந்திரமாக காய் நகர்த்தி பிழைக்கிறார் என்பதே ஜகமே தந்திரத்தின் மீதிக்கதை.

படத்தின் கதாபாத்திரங்கள்:
சுருளியாக வரும் தனுஷ் படம் முழுவதும் துருதுருவென துள்ளலான நடிப்பை கொடுத்துள்ளார். மதுரையில் மட்டுமில்லாது பிரிட்டனில் ஆங்கிலேயர்களிடம் அவர் அடிக்கும் நக்கல்களும் ஆங்காங்கே நம்மை ரசிக்க வைக்கின்றது. விஷாலின் ஆக்ஷன் படத்தில் அறிமுகமான மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இத்திரைப்படத்தின் நாயகி. ஈழத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவரின் நடிப்பு பாராட்டுதலுக்குரியது. குறிப்பாக பிலாஷ்பேக் குறித்த காட்சிகளில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். கேங்ஸ்டர்களாக வரும் ஜோஜு ஜார்ஜ் ( சிவதாஸ் ) மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ ( பீட்டர் ) தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளனர். சுருளியின் மொழிபெயர்ப்பாளராக வரும் சரத் ரவி, சிறிது நேரம் வந்தாலும் தனது கதாப்பாத்திரத்திற்கு நேர்மை சேர்த்துள்ளார். மேலும், கலையரசன், வடிவுக்கரசி, தீபக் பரமேஷ், சௌந்தர்ராஜா, ராமச்சந்தர துரைராஜ் என அனைவரும் தங்கள் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக பதிவு செய்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்:
படத்தில் அனைத்து கலைஞர்களும் ஒன்றிணைந்து சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது. வெயில், மழை, பனி என மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் திரைக்கதை நகர்வதாக அமைக்கப்பட்டுள்ளது. இம்மூன்று காலக்கட்டங்களையும் அதற்கேற்ற வண்ணங்களில் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். மேலும் கேங்க்ஸ்டர் படங்களுக்கே உரிய சில ஷாட்கள் இந்த படத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணனின் இசை திரைப்படத்திற்கு பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு காட்சிகளின் சுவாரசியத்தை மேலும் மெருகேற்றியுள்ளது. ஆக்ஷன் திரைப்படம் என்பதால் திலீப் சுப்பராயனின் துப்பாக்கி சண்டைகள் படத்திற்கு பெரிதும் உதவியுள்ளது.

பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்:
இப்படத்தின் அடிப்படை கதை தமிழ் சினிமாவிற்கு மிகவும் பழக்கப்பட்டது தான். திரைக்கதையாவது புதுமையாக இருக்குமா என்று தேடினால் அதற்கும் “இல்லை”என்ற பதில் தான்.உதாரணத்திற்கு விஜய் நடித்த கத்தி மற்றும் பல ரஜினி படங்களை அவ்வப்போது நமக்கு அது ஞாபகப்படுத்தியது. படத்தின் திரைக்கதை பல இடத்தில் பெரும் தொய்வை ஏற்படுத்துகிறது. எனினும், அவை காட்சிப்படுத்தப்பட்ட விதம் பாராட்டுக்குரியது. பலநாடுகள் இத்திரைப்படத்தில் இடம்பெறுவதால் ஒவ்வொரு இடமும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வசனங்கள் கூடுதல் சிறப்பு. “நம்ம நாட்ட தாண்டுனா நம்மளயெல்லாம் வெளிநாட்டுக்காரன் கீழ் சாதியா தான் பாக்குறான்..நீ ஊர்ல இருந்துட்டு சாதிய புடிச்சு தொங்காத..நமக்கு வேற போராட்டங்கள் நிறைய இருக்கு” என்றும் “பூர்வீகம்னு சொல்லுற, நாமயெல்லாம் எங்கிருந்தோ புலம்பெயர்ந்து வந்தவங்க தான்” போன்ற வசனங்களும் ( வீட்டிலிருந்தபடியே ) நம்மை கைதட்ட வைக்கிறது.
சிவதாஸின் கதாப்பாத்திரம் மிக வலுவான கதாப்பாத்திரம். அகதிகளுக்காக உதவ முற்படும் அப்படிப்பட்ட முக்கியமான கதாப்பாத்திரமானது மேலும் வலுவாக அமைக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியம். மேலும், மக்களுக்கு பெரிதும் அறிமுகம் இல்லாத நடிகரை அக்கதாப்பாத்திரத்தில் நடிக்க வைத்தது ஒன்றவில்லை. பீட்டர் கதாப்பாத்திரத்திற்கும் இதே நிலைமை தான். சிவதாஸின் உரிமைப்போராட்டத்தை குறிக்க அவர் வீட்டில் இருக்கும் “எங்கள் தாகம் தாயகம்” என்ற வசனங்களும், வில்லன் பீட்டர் வீட்டில் உள்ள “வெள்ளை ஏகாதிபத்தியத்தை” பிரதிபலிக்கும் வெள்ளை நிற உடைகளும், அதனை சார்ந்த புகைப்படங்களும் அவர்களது கதாப்பாத்திரத்தை கச்சிதமாக பிரதிபலித்தன. நிறைய துப்பாக்கிச் சண்டைகள் நடந்தாலும், படம் எங்கிலும் காவல்துறை என்ற ஒன்று வந்து அதனைத் தடுக்கவே இல்லை.
படத்தில் பேசப்படும் அரசியல்:
படத்தின் இரண்டாம் பாதியில் கதாநாயகி கூறும் பிளாஷ்பேக் மூலமும் “ஒரு பேட்டரிக்கே எவ்ளோ நாள் ஜெயில்ல வச்சிருப்பாங்க தெரியுமா?” போன்ற வசனங்களும் ,கதை ஈழத்தமிழர்களை குறித்தது என்று நாம் எண்ண வழிவகுக்கிறது. எனினும், ஈழத்தமிழ் அகதிகள் பிரச்னை மட்டுமல்லாது உலகம் முழுவதும் இனவாத, பாசிச ஏகாதிபத்தியத்தினால் பலநாடுகளில் அகதிகளாக்கப்படும் மக்களைப் பற்றிய கதையாக இத்திரைப்படத்தை அமைக்க முற்பட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். வாழ்நாள் முழுவதும் வாழ நிலமில்லாமல் இருக்கும் முருகேசனுக்கு இறந்த பின்தான் 6 அடி நிலம் கிடைக்கிறது என்பதுபோன்ற காட்சிகள் நமக்கு அதனை உணர்த்துகின்றது. இதுபோன்ற சில காட்சிகளிலும், சில வசனங்களிலும் இயக்குநர் அதில் வெற்றி கண்டாலும், தனுஷ் வரும் கதாநாயக பிம்பக்காட்சிகள் அதை மடைமாற்றி வழக்கமான கதாநாயக வழிபாட்டிற்கு வழிவகை செய்கிறது.
உரிமைக்காக போராடும் படங்களில் பெரும்பாலும் சம்பந்தமே இல்லாமல் வெளியில் இருந்து வரும் கதாநாயகனே ஒரு குழுவிற்காக போராடி உரிமையை வாங்கித்தருவதாக காட்சிப்படுத்துவது தமிழ் சினிமாவில் பிரதானமாகவே இருந்து வருகிறது. பொதுவாக கதாநாயகன் என்பவன் போராடும் அக்குழுவில் இருக்கும் ஒருவனாகவே இருந்து வெகுண்டெழுந்து போராடி உரிமையைப் பெறுவதே அப்போராட்டத்திற்கான சரியான பிரதிபலிப்பாக இருக்கும். மேலும், இனத்தூய்மைவாதம் பேசுபவர்களே அவர்களின் மனித மரபணுவில் நியாண்டதார்களின் மரபணு கலந்திருப்பதை அறிவது அவசியம். ஆகையால், நாம் அனைவரும் எங்கிருந்தோ வந்த அகதிகள் தான். ஈழத்தமிழர் அகதிகள் பிரச்னை போன்ற எந்த ஒரு இனவாத, பாசிச பிரச்னையும் மக்களுக்கும் ஒரு நாட்டின் அரசிற்குமான பிரச்சனையாகும். உலகப்போருக்கு தயாராகும் பல நாடுகளும் தங்கள் சொந்த நாட்டின் மக்கள் மற்றும் அகதிகளின் பிரச்னைகளுக்கும் செவி சாய்ப்பதில்லை. ஒரு பேப்பர் இல்லையென்றால் நாம் அகதிதான் என்பதன் மூலம் மக்களானவர்கள் அகதிகளாக வருவதில்லை, மாற்றாக அகதிகளாக ஆக்கப்படுகின்றனர் என்பதனை கூற முற்பட்டுள்ளார் இயக்குநர்.

ஆனால், இவை திரைக்கதையின் வெறும் ஒரு அங்கமாக மட்டுமே படத்தில் கையாளப்பட்டுள்ளதே,அன்றி மொத்தமாக தனுஷின் கதாநாயக பிம்பமே பெரிதும் திரைக்கதையில் புலப்படுகிறது .படத்தினை முழுவதுமாக பார்த்து முடிக்கும்பொது அகதிகளின் பிரச்னைகளையும் இன்னல்களையும் நாம் உணர முயன்றாலும், மொத்தமாக திரைப்படம் குறித்த எண்ணம் என்னவோ பெரிதும் நம்மை திருப்தி படுத்தாத உணர்வாகவே உள்ளது.
- சி.பிரபாகரன்







