சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்பான போஸ்டுகளை இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து நீக்கினார் அதிரடி வீரர் ஜடேஜா. இதனால், அடுத்த சீசனில் அவர் சென்னை அணியில் விளையாடமாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணியின் ஆல்-ரவுண்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமாகிய ஜடேஜாவிற்கும் சென்னை அணி நிர்வாகத்திற்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2012 முதல் சென்னை அணிக்கு விளையாடி வரும் ஜடேஜா, அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
2022-ம் ஆண்டு தொடர் தொடங்குவதற்கு முன்பாக தோனி தனது கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். அணியின் எதிர்கால நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய சென்னை அணி, ஜடேஜா தலைமையில் சோபிக்கத் தவறியது. அவரது கேப்டன்சியில் 8 போட்டிகளில் களமிறங்கிய சென்னை அணி, 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தது.
இதனை தொடர்ந்து தொடரின் பாதியிலேயே கேப்டன் பொறுப்பு மீண்டும் தோனியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜடேஜா தனது ஆட்டத்தில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது. எனினும் இது அணி நிர்வாகம் எடுத்த முடிவு, அதனால் ஜடேஜா அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஜடேஜாவும் காயம் காரணமாக 2022 ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார்.
தற்போது சென்னை அணி தொடர்பான போஸ்டுகளை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்து நீக்கி, ஏற்கனவே உலவி வந்த வதந்திகளுக்கு வலு சேர்த்துள்ளார். இதன்மூலம் சென்னை அணிக்கும் ஜடேஜாவிற்கும் பிரச்சனை இருப்பது உறுதியாகியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஜடேஜா, சென்னை அணிக்காக பங்கேற்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.








