முக்கியச் செய்திகள் செய்திகள்

அவர்தான் எதிர்காலம்: ஜடேஜா சர்ச்சைக்கு சிஎஸ்கே முற்றுப்புள்ளி!

ஜடேஜா குறித்து எழுந்துவரும் சர்ச்சைக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

சென்னை அணிக்கு இந்த ஐபிஎல் மிகவும் கடினமான காலம். தீபக் சஹார், ஆடம் மில்னே, ஜடேஜா ஆகியோர் அடுத்தத்து காயம் காரணாக  விலகியுள்ளனர். சென்னை அணியின் நட்சத்திர வீரரான ஜடேஜாவின் விலகல் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காயம் காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் அணியில் இருந்து ஜடேஜா விலகி இருப்பதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.

கடந்த சீசனில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, சென்னை அணி சார்பில் ஜடேஜா, தோனி, கெய்க்வாட், மொயின்அலி ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர். தோனியைவிட ஜடேஜாவை அதிக விலை கொடுத்து தக்கவைத்திருந்தனர். அது ஏன் என்பதற்கான பதில் இந்த சீசனின் தொடக்கத்திலேயே கிடைத்தது. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக சென்னை அணிக்கு ஜடேஜாவை கேப்டனாக நியமிக்கலாம் என தோனி  ஆலோசனை கூறியிருந்தார்.

இதையடுத்து, ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அடுத்தடுத்த தோல்வியின் மூலம் சென்னை அணி துவண்டது. ஜடேஜாவும் கேப்டன்ஸியில் மிகவும் பிரெஸராகி இருந்ததால் அவருடைய இயல்பான ஆட்டமும் பாதிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் ஜடேஜா கேப்டன் பதவியில் இருந்து விலகி தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து, தோனி கேப்டனான பின்னர் ஹைதரபாத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் ஜடேஜா கலந்துகொண்டார். பெங்களூருக்கு எதிரான போட்டியின்போது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் ஜடேஜா விளையாடவில்லை.

இந்நிலையில், “சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜடேஜாவை அன்ஃபாலோ செய்துவிட்டனர். அதன் தொடர்ச்சியாகத்தான் ஜடேஜா அணியில் இருந்து விலகியதாகவும் அறிவிப்பு வெளியாகிறது. ஏற்கெனவே சென்னை அணி நிர்வாகத்துக்கும், ரெய்னாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு சென்னை அணி ரெய்னாவை அணியில் வைத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டனர். அதேபோல, ஜடேஜாவையும் அணி கைவிட்டுவிடும்.  அதன் அடிப்படையில் இனி ஜடேஜாவும் சென்னைக்காக விளையாடப் போவதில்லை. அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி நிர்வாகம் ஜடேஜாவைக் கைவிட்டுவிடும்” என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில், சிஎஸ்கேவின் சிஇஓ விஸ்வநாதன் கூறுகையில், “சமூக வலைதளங்களில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் கவனிப்பதில்லை. சமூக வலைதளங்களை நாங்கள் பின்தொடருவதில்லை. எனவே, அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது. அங்கு நடப்பது குறித்து நாங்கள் கவலைப்படுவதும் இல்லை. சிஎஸ்கேவின் எதிர்காலத் திட்டங்களில் உறுதியாக ஜடேஜா இருக்கிறார். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று கூறினார்.

இதன்மூலம் ஜடேஜா குறித்த சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; செல்லக்குமார் எம்.பி

Saravana Kumar

கொரோனா தடுப்பு நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Halley Karthik

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி கணக்கீடு முறையில் மாற்றம்

Vandhana