அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக ஆரம்ப காலத்தை தொடங்கி பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
1954 ம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்தவர் எடப்பாடி பழனிசாமி.
எம்ஜிஆரின் மீது இருந்த பற்றால், 1972ம் ஆண்டு அதிமுகவில் இணைந்து பணியாற்றிய எடப்பாடி பழனிசாமிக்கு 1973 ம் ஆண்டு சிலுவம்பாளையம் கிளைக்கழகச் செயலாளர் பதவி கிடைத்தது .
1989ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அணியில் இருந்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் அதே எடப்பாடி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
1996 சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு, 1998ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று டெல்லிக்கு எம்பியாகச் சென்றார்.
2011ம் ஆண்டு மீண்டும் எடப்பாடி தொகுதியில் அவர் போட்டியிட வாய்ப்பளித்தார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. அந்த தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அந்த ஆட்சிக் காலத்தில்தான், முதன்முறையாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பதவி வகித்தார் எடப்பாடி பழனிசாமி.
2016ம் ஆண்டும் 4வது முறையாக எடப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரானார்.
2017ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
2021ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்தார்.
2021ம் ஆண்டு தேர்தலில் 65 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெறவைத்து, பலம் மிக்க எதிர்க்கட்சித்தலைவரான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அதிமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
தற்போது, அதிமுக செயற்குழு – பொதுக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.








