ஒரே நாளில் 156 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்-சென்னை மாநகராட்சி

தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனைப்படி நேற்று ஒரே நாளில் 156.95 மெட்ரிக் டன் திடக்கழிவுகளும், 452.39 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாளர் பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட…

தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனைப்படி நேற்று ஒரே நாளில் 156.95 மெட்ரிக் டன் திடக்கழிவுகளும், 452.39 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாளர் பெருநகர சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சுத்தமான, பசுமையான, நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு 2022-2023ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் அறிவித்தார்.

நேற்று பெருநகர மாநகராட்சி சார்பில் 200 வார்டுகளிலும் தீவிர தூய்மைப் பணி பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது. மேயர் பிரியா மணலி மண்டலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நமது குப்பை, நமது பொறுப்பு என்ற விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தினார்.

மேலும், பெருநகர மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் பங்களிப்புடன் நடைபெற்ற தீவிர தூய்மைப் பணிகளில் 283 பேருந்து நிறுத்தங்களில் 3.37 மெட்ரிக் டன் உலர் கழிவுகள், 128 பூங்காக்களில் 14.86 மெட்ரிக் டன் உலர் கழிவுகள், 75 வழிபாட்டுத் தலங்களில் 4.63 மெட்ரிக் டன் உலர் கழிவுகள், 37 ரயில்வே நிலையங்களின் புறப்பகுதிகளில் 6.48 மெட்ரிக் டன் உலர் கழிவுகள், 54 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதிகளில் 7.88 மெட்ரிக் டன் உலர் கழிவுகள் அகற்றப்பட்டன.

இதேபோன்று கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள 63 இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் இருந்து 452.39 மெட்ரிக் டன் கட்டிடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
மருத்துவமனை மற்றும் இதர மக்கள் அதிகம் கூடும் முக்கியப் பகுதிகளில் 78 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தூய்மைப் பணியில் 52.02 மெட்ரிக் டன் அளவிலான திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்த தீவிரத் தூய்மை பணியின்போது மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 19,082 குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று 82,411 நபர்களை சந்தித்து குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

எனவே, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் நமது குப்பை நமது பொறுப்பு என்பதனை உணர்ந்து பொது இடங்களில் தேவையற்ற கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து தங்கள் இல்லங்களில் சேகரமாகும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.