“தடுமாறியபோது என்னை தூக்கிப்பிடித்து அமைச்சராக்கி அழகு பார்த்தவர் எங்கள் முதல்வர்” – அமைச்சர் செங்கோட்டையன்!

அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது என்று தடுமாறிக் கொண்டிருந்தபோது என்னை தூக்கிப்பிடித்து அமைச்சர் ஆகி அழகு பார்த்தவர் எங்கள் முதல்வர் என்று அமைச்சார் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் பேசுகையில், “ஆளும் கட்சியினர் திமுகவை விமர்சிக்கும் பொழுது அதிமுகவினரான எங்களையும் சேர்த்து போட்டு அடிக்கிறீர்கள். பொதுப்பணித்துறை அமைச்சர் தவெகவும் அதிமுகவும் ஒன்றுதான் என்று கூறுகிறார். எங்களால் பதிலே சொல்ல முடியவில்லை. தமிழ்நாட்டில் 32 காலம் ஆட்சியில் இருந்த அதிமுக’தான் தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தது. 100 ஆண்டுகளுக்கு அதிமுகவின் சாதனை திட்டங்கள் நிலைத்து நிற்கும். தற்பொழுது உள்ள சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் இருவருமே அதிமுகவிலிருந்து தான் தற்பொழுது தவெக’விற்கு வந்திருக்கிறார்கள். இவர்களை எல்லாம் நாங்கள் கொடுத்தது தான் என்று தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் என் ஆனந்த், ” சபாநாயகரை நாங்கள் தான் கொடுத்தோம், வருவாய்த்துறை அமைச்சரையும் நாங்கள்தான் கொடுத்தோம் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கூறுகிறார். அந்த இரண்டு பேரையும் தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியது முதல்வர் விஜய் தான் என்பதை கூறிக் கொள்கிறேன்.

அதேபோல் அம்மாவின் படத்தை எப்பொழுதும் பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னவரும் எங்கள் தலைவர் தான். நூறு ஆண்டுகால வரலாறு இருப்பதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சொன்னார் இருப்பினும், நூறா ஆண்டுகள் அல்ல 200 ஆண்டுகளாக இருந்தாலும் தலைவர் தளபதியின் வரலாறு கண்டிப்பாக தமிழ்நாட்டில் நிலைத்திருக்கும். எங்கள் தலைவர் தளபதி மீது நம்பிக்கை வைத்து தான் நீங்கள் கோரிக்கையை வைத்திருக்கிறீர்கள் நிச்சயமாக உங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

இதனை தொடர்ந்து பேசிய வருவாய்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசியல் வாழ்க்கை எனக்கு முடிந்து விட்டது என்று தடுமாறிக் கொண்டிருந்தபோது என்னை தூக்கிப்பிடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆக்கி வருவாய்த்துறை அமைச்சராக தற்பொழுது அழகு பார்த்துக் கொண்டிருப்பவர் எங்கள் தளபதி. அவர்தான் இனி என்றைக்கும் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.