“கடலில், மிதவை கூண்டு மீன் வளர்ப்பு மேற்கொள்ள மானிய உதவி வழங்கப்படும்” – அமைச்சர் ஸ்ரீநாத் அறிவிப்பு!

கடலோர மாவட்ட கடற்பகுதிகளில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதிலளித்த அமைச்சர் ஸ்ரீநாத், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அப்போது பேசியவர்,

கடலில், மிதவை கூண்டு மீன் வளர்ப்பு மேற்கொள்ள மானிய உதவி வழங்கப்படும்.

கடற்பாசி வளர்ப்பு மேற்கொள்ள மானிய உதவி வழங்கப்படும்.

முட்டுக்காடு -மீன்வளர்ப்பு தொழில் காப்பகம் மற்றும் தொழிற்பயிற்சி பயிலும் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு புதிய தங்கும் விடுதி அமைக்கப்படும்.

கடலில் மீன்பிடிக்கும்போது, அண்டை நாட்டினரால் மீனவர்களின் சிறைபிடிக்கப்படும் குடும்பங்களுக்கு, தற்போது வழங்கப்படும் தினசரி உதவித்தொகை, ரூபாய் 500-லிருந்து ரூபாய் 600- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகத்தில் அதிநவீன மீன் சந்தை அமைக்கப்படும்.

நன்னீர் இறால் வளர்ப்பில் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க, நன்னீர் இறால் இனப்பெருக்க மையம் அமைக்கப்படும்.

சென்னையில், சர்வதேச கடல் உணவுக் கண்காட்சி மற்றும் சமையல் திருவிழா நடத்தப்படும்.

கடலில் மீன்பிடிக்கும் போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகை, ரூபாய் 350-லிருந்து ரூபாய் 600- ஆக உயர்த்தப்படும்.

கடல் மீன்வளத்தை பெருக்கும் நோக்கில், கடலோர மாவட்ட கடற்பகுதிகளில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும்.

உவர்நீர் மீன் வளர்ப்பு மற்றும் கடல்வாழ் உயிரின வளர்ப்புக் கொள்கை உருவாக்கப்படும்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு, மீட்க இயலாத படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 1.86 கோடி நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.