“வெறும் போட்டோ ஷூட் ஆட்சியாக இல்லாமல், மக்களுக்கு பயனளிக்கும் ஆட்சியாக இருக்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்!

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளை பேசாமல் பழைய வரலாறுகளை பேசி நேரத்தை வீணடிக்கிறார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் ,தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “என்னுடைய கோரிக்கைகளை சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் பலமுறை கேட்டேன். ஆனால், என்னுடைய கோரிக்கைகள் மறுக்கப்பட்டன.

சர்க்காரியா கமிஷன், மிசா கைது உள்ளிட்டவை பழைய வரலாற்று நிகழ்வுகள். பழைய விஷயங்களைப் பற்றி பேசி, சட்டப்பேரவையின் நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக, தமிழ்நாட்டு மக்களுக்குப் பயனளிக்கும் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். ஆனால், பழைய விஷயங்களைப் பேசி, பேசி காலத்தைத்தான் வீணடிக்கின்றனர். மக்களுக்கு பயனில்லாத ஒரு சட்டப்பேரவையாக இது செயல்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை குறித்து சட்டப்பேரவையில் பேசியுள்ளோம். மிகவும் நஷ்டத்தில் இயங்கி வரும் இந்தத் துறையை மேம்படுத்தும் நோக்கத்தில்தான் ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதையும் ஆளுங்கட்சியினர் மேற்கொள்ளவில்லை. ஆட்டோ மீட்டர் கட்டணம், ஓலா, உபர் உள்ளிட்டவற்றின் கட்டணங்கள் உயர்த்தப்படாமல் உள்ளன. இதுகுறித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருத்தாசலம் தொகுதியைப் பொறுத்தவரை, ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் மக்கள் செல்லும் திருப்பதி, திருச்செந்தூர், பழனி போன்ற இடங்களுக்கு நேரடி பேருந்து வசதி இல்லை. இந்த வழித்தடங்களில் நேரடி பேருந்துகளை இயக்க வேண்டும். விருத்தாசலத்தில் உள்ள போக்குவரத்துப் பணிமனையில் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் உள்ளது. அங்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் அறிவு வளர்ச்சிக்கும், கல்வி முன்னேற்றத்திற்கும் தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். விருத்தாசலத்தில் உள்ள கிளைச் சிறையை விரிவாக்கம் செய்ய வேண்டும். மேலும், விருத்தாசலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும். நெல் சேமிப்புக் கிடங்கையும் விருத்தாசலத்தில் அமைத்துத் தர வேண்டும் என அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

விருத்தாசலத்தில் செயல்பட்டு வந்த சூரியகாந்தி எண்ணெய் தொழிற்சாலை தற்போது முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. அந்தத் தொழிற்சாலையை நம்பி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை செய்து வந்தனர். எனவே, அந்தத் தொழிற்சாலையை மீண்டும் திறந்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, இந்தக் கூட்டத்தொடரில் அதிகபட்ச நேரம் சண்டை மற்றும் மக்களுக்கு பயனில்லாத விஷயங்களைப் பேசுவதிலேயே கழிந்துள்ளது. ஆக்கப்பூர்வமான விஷயங்கள் குறைவாகவே பேசப்பட்டுள்ளன.

நேற்று முதலமைச்சர் தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை குறித்து பேசினார். ஆனால், இதுவரை லட்சக்கணக்கான காவலர்களுக்காக ஏதேனும் புதிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளாரா என்றால் இல்லை. காவலர்கள் புதிய ஓய்வூதியத் திட்டம், ஓய்வூதிய உயர்வு, குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது.

இதை ஆரோக்கியமான விஷயமாக நாங்கள் பார்க்கவில்லை. மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில்தான் சட்டப்பேரவை நடைபெறுகிறது. எனவே, சட்டப்பேரவையில் மக்களின் பிரச்சினைகள் குறித்துதான் பேச வேண்டும். காவல்துறையினரின் கோரிக்கைகள் தொடர்பாகவும், காவல்துறைக்கு முதலமைச்சர் மூலமாக நல்ல அறிவிப்புகளையும் திட்டங்களையும் தொடங்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் முறையிட்டேன்.

மேட்டூர் சென்று அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார். ஆனால், அந்தத் தண்ணீர் கடைமடைப் பகுதிகளுக்குச் சென்றதா என்பதை அவர் ஆய்வு செய்தாரா என்பது தெரியவில்லை. கால்வாய்களில் சகதிகள், முட்புதர்கள் உள்ளிட்டவை உள்ளன. தண்ணீர் கடைமடை வரை சென்றதா என்பதை முதலமைச்சர் நேரடியாக ஆய்வு செய்திருக்க வேண்டும்.

ஒரே நாளில் ஆறு கொலைகள் நடைபெறுகின்றன. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதை கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது. இது வெறும் போட்டோ ஷூட் ஆட்சியாக இல்லாமல், மக்களுக்கு பயனளிக்கும் ஆட்சியாக இருக்க வேண்டும். சபாநாயகர் நடுநிலையோடுதான் செயல்படுகிறார். இதுகுறித்து உடனடியாக எந்தக் கருத்தையும் கூற முடியாது. அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கிறார் அனைவரையும் அனுசரித்துச் செல்கிறார். தன்னால் முடிந்த அளவுக்கு அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கிறார்.

அவர் அதிகமாகக் கூறியது அமருங்கள், அமருங்கள் என்பதுதான். நேற்று நடந்த சம்பவத்திலும், பலமுறை இருக்கையில் அமருமாறு சபாநாயகர் கூறினார். ஆனால், அதைக் கேட்காமல் அவர்கள் தொடர்ந்து இருந்ததால், பேரவைக் காவலர்கள் மூலம் அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.