தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணியில், மாநில-ஒன்றிய அரசுகளால் அறிவிக்கை செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்களைக் கணக்கெடுப்புச் செயலியில் முன்னரே பதிவேற்றம் செய்து துல்லியமான விவரங்களைச் சேகரிக்க வேண்டும் என்றும், குழப்பத்தை ஏற்படுத்தும் ‘திறந்தவெளிப் பதிவு முறையை’ கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் அவர்களால் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித்தீர்மானத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன்! சமூகநீதியை உறுதிசெய்யும் இத்தீர்மானத்தை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஏகமனதாக ஆதரித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால், சில நாட்களுக்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு குறித்துப் பேசி, சட்டப்பேரவையில் உடனடியாகத் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். ஆனால் இன்று சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் இத்தீர்மானம் முன்கூட்டியே தெளிவாக இடம்பெற்றிருந்தும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவைக்கு வராததோடு, நேற்றைய நிகழ்வுகளைக் காரணம் காட்டி திமுகவினர் ரகளை செய்து, இன்று இந்த தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவையில் பங்கேற்காமல் புறக்கணித்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது!
இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் இத்தீர்மானம் முன்னரே இடம்பெற்றிருந்தும், அதை நன்கு அறிந்திருந்தும் நேற்றைய விவகாரத்தைச் சாக்காக வைத்து ராகளை செய்ததன் மூலம், ஓபிசி இடஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு போன்ற முக்கிய உரிமைகள் சார்ந்த பிரச்சினையில் திமுக பங்கேற்காமல் போனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




