விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமவளவன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நெல்லை கவின் கொலைவழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சுர்ஜித்தின் (ஏ1) பெற்றோர் சரவணன்(ஏ2) கிருஷ்ணகுமாரி(ஏ3) ஆகியோர் மீதான ‘குற்றச்சாற்று அறிக்கையை’ மதுரை உயர்நீதிமன்றம் ‘ரத்து’ செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விசாரணைக்குப் பின்னர் ஆதாரங்கள் இல்லையென விடுதலை செய்வது தான் நீதிமன்றத்துக்குள்ள அதிகாரம். குற்றவிசாரணை தொடங்குவதற்கு முன்னரே குற்ற அறிக்கையை ‘ரத்து’ செய்வது ‘தவறான முன்மாதிரி’ ஆகும்.
கவின் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட சரவணன் பிணையில் (ஜாமீனில்) வெளியே வந்ததும் இன்னொரு கொலைவழக்கில் கூலிப்படையினரோடு தொடர்பிருப்பதாக மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரையும் அவரது மனைவியையையும் குற்றமற்றவர்கள் என்கிற தோற்றத்தை உருவாக்கும் வகையில் உயர்நீதிமன்ற நடவடிக்கை அமைந்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்திட ஆவன செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




