மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல, அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆய்வறிக்கையில் இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல என்பதும், ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்பதும் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விஷசாராயத்தை விற்பனை செய்த வியாபாரிகள் அமரன், அமாவாசை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு 1 லட்சத்து 39 ஆயிரத்து 697 குற்றவாளிகளும், இந்த ஆண்டில் இதுவரை 55 ஆயிரத்து 173 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய மரணங்கள்!! – நியூஸ்7 தமிழ் கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டதால், விஷச்சாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளதால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், இவ்விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் டிஜிபி சைலேந்திராபாபு தெரிவித்துள்ளார்.







