சுங்கச்சாவடிகளை சீரமைக்காமல் சுங்கக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது அநீதி – அன்புமணி ராமதாஸ்

சுங்கச்சாவடிகளை சீரமைக்காமல் சுங்கக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது கண்டிக்கத்தக்கது என மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.   பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள…

சுங்கச்சாவடிகளை சீரமைக்காமல் சுங்கக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது கண்டிக்கத்தக்கது என மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 50 சுங்கச்சாவடிகளில் 28 சாவடிகளின்
சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள்ஆணையம் அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். சுங்கச்சாவடிகளின் கட்டண வசூல் வெளிப்படைத் தன்மை கொண்டதாக மாற்றப்படாத நிலையில், ஆண்டுதோறும் சுங்கக் கட்டணங்களை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

 

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே 50 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர் உள்ளிட்ட 22 சுங்கச் சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. மீதமுள்ள விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி, சமயபுரம் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் வரும் ஒன்றாம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

 

சுங்கச் சாவடிகள் தொடர்பாக மத்திய அரசு அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், சுங்கக் கட்டணத்தை நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடர்ந்து உயர்த்துவது அநீதியானது. சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

புதிய சுங்கக்கட்டண வசூல் முறைக்கு மாறுவதற்கு நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும். அந்த சட்டத்தை தயாரித்து, அமைச்சரவை ஒப்புதல் பெற்று இயற்ற பல மாதங்கள் ஆகும். புதிய தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கும், அதில் தேசிய நெடுஞ்சாலைகளை பதிவு செய்வதற்கும், அனைத்து வாகனங்களிலும் புதிய டிஜிட்டல் எண் பலகைகளை பொறுத்துவதற்கும் ஆண்டுக்கணக்கில்ஆகலாம்.

 

அதுவரை அளவுக்கு அதிகமான சுங்கச் சாவடிகளில், அளவுக்கு அதிகமாக கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பது எந்த வகையிலும் நியாயமாக இருக்காது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 60 கி.மீக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதி நடைமுறைப்படுத்தப்படும் வரையிலோ அல்லது புதிய சுங்கக்கட்டண வசூல் தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்படும் வரையிலோ சுங்கக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்.

 

குறைந்தபட்சம் சுங்கக் கட்டணங்களை ஆண்டுக்கு ஆண்டு உயர்த்துவதையாவது மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்துவதாக அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.