ராகுல் காந்தி மீதான 7 முக்கிய விமர்சனங்கள்

காங்கிரசில் இருந்து இன்று விலகிய குலாம் நபி ஆசாத் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள 5 பக்க கடிதத்தில், ராகுல் காந்தி மீது முன்வைத்துள்ள கடுமையான 7 விமர்சனங்களைப் பார்ப்போம். ராகுலின்…

காங்கிரசில் இருந்து இன்று விலகிய குலாம் நபி ஆசாத் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள 5 பக்க கடிதத்தில், ராகுல் காந்தி மீது முன்வைத்துள்ள கடுமையான 7 விமர்சனங்களைப் பார்ப்போம்.

ராகுலின் குழந்தைத்தனமான செயல்பாடு

“மத்திய அரசு 2013ல் கொண்டு வந்த அவசரச் சட்டத்தை ஊடகங்கள் முன்பு ராகுல் காந்தி கிழித்து எறிந்தது இதற்கு மிகச் சிறந்த உதாரணம். அந்த அவசரச் சட்டமானது காங்கிரசின் உயர் மட்டக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவையில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ராகுலின் இந்த குழந்தைத் தனமான நடவடிக்கை பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கியது”

என்று கடிதத்தில் குலாம் நபி ஆசாத் குறிப்பிட்டுள்ளார்.

கலந்தாலோசிக்கும் நடைமுறை சீர்குலைப்பு

“ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு , குறிப்பாக 2013 ஜனவரிக்கு பிறகு,

காங்கிரஸ் கட்சியில் அதற்கு முன்பு இருந்த கலந்தலோசிக்கும் நடைமுறை முற்றிலும் சீர்குலைக்கப்பட்டதாக”

குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டி இருக்கிறார்.

மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டனர்

காங்கிரஸ் கட்சியில் இருந்த அனைத்து மூத்த தலைவர்கள் மற்றும் அனுபவமிக்க தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். கட்சியில் அனுபவம் இல்லாதவர்களால் கட்சி நடத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுலின் செயலே 2014 தோல்விக்கு காரணம்

2014ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விக்கு ராகுல் காந்தியின் செயல்களே முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. அவசரச் சட்டத்தை கிழித்த செயலே தோல்விக்கும், பிரச்சார பின்னடைவுக்கும் முக்கிய காரணமாக இருந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் ‘திடீர்’ விலகல்

2019 தேர்தலுக்கு பிறகு, கட்சியில் நிலைமை மிக மோசமடைந்தது. அவசர அவசரமாக ராகுல் காந்தி பதவி விலகியதும், மத்த தலைவர்களைக் குற்றம் சாட்டியதும் சீர்குலைவுகளுக்கு காரணம் என்று குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் இணைப்பு யாத்திரை

ராகுல் காந்தி நாடு முழுவதும் மேற்கொள்ள இருக்கும்

பாரத இணைப்பு யாத்திரைக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர்களை இணைக்கும் காங்கிரஸ் இணைப்பு யாத்திரையை

நடத்த வேண்டும் என்றும் குலாம் நபி குறிப்பிட்டுள்ளார்.

ரிமோட் கண்ரோல் நிர்வாகம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குவதாக குற்றம் சாட்டப்பட்ட அதை நடைமுறை தற்போது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலும் நிகழ்கிறது. நீங்கள் எந்த குழுவின் தலைவராகவும் இருக்கலாம். ஆனால் முடிவுகளை எல்லாம் ராகுல் காந்தியோ அல்லது அவருடைய செக்யூரிட்டி கார்டுகளும், உதவியாளர்களுமே எடுப்பதாக சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குலாம் நபி ஆசாத் கடுமையாகச் சாடியுள்ளார்.

-ஜெயகார்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.