“சிறுமிகளுக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி வருவது வேதனைக்குரியது” – இபிஎஸ் கண்டனம்!

சிறுமிகளுக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சமூக வலைத்தளம் மூலம் சில இளைஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளைஞர்கள் குனியமுத்தூரில் உள்ள அறைக்கு வருமாறு சிறுமிக்கு அழைப்பு விடுத்தனர். அங்கு சென்ற சிறுமியை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பததால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமி கல்லூரி மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்தது. இதையடுத்து உக்கடம் காவல்துறையினர் கல்லூரி மாணவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமிகளுக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு திமுக ஆட்சியில் மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது.”குற்றம் நடந்த பின் கைது செய்துவிட்டோம்” என்று சொல்லும் முதலமைச்சர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்?

தனக்கு தானே “அப்பா” என்று புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு, இந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா? இவரின் பாதுகாப்பு பரிபோனதற்கு யார் பொறுப்பு?பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக துறந்துவிட்டு, விளம்பர மோகத்தில் இருக்கும் தமிழ்நாடு அரசுக்கு எனது கடும் கண்டனம். கோவை மாணவி பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.