கேஜிஃஎப் படத்த அப்படியே எடுத்து வச்சிருந்தா கூட பரவாயில்லை, ஆனா இப்படி பண்ணிட்டீங்களே..? – ”கப்ஜா” விமர்சனம்

உபேந்திரா , கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரேயா நடித்து சமீபத்தில் வெளியான கப்ஜா திரைப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். சமீப காலமாக கன்னட திரைப்படங்கள் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல்…

உபேந்திரா , கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரேயா நடித்து சமீபத்தில் வெளியான கப்ஜா திரைப்படம் எப்படி உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமீப காலமாக கன்னட திரைப்படங்கள் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ள மற்றொரு கன்னட படம் கப்ஜா. பான் இந்தியா மூவியாக உருவாகியுள்ள இப்படத்தை ஆர் சந்திரு இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் உபேந்திரா, ஸ்ரேயா, முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அதே போல கிச்சா சுதீப், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது.

கப்ஜா திரைப்படம் எப்படி உள்ளது ..?

சுதந்திர போராட்ட வீரரின் மகனான உபேந்திரா விமான படையில் பயிற்சி முடித்து விட்டு தனது சொந்த ஊருக்கு வருகிறார். அந்த நேரத்தில் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அவர் வசித்து வந்த அமராபுரம் பகுதியை கலீல் என்ற பெரிய டான் தன் வசம் வைத்திருப்பார். அதே நேரத்தில் அமராபுரம் பகுதியை கைப்பற்ற மற்ற சிலரும் முயற்சி செய்து வருவார்கள்.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக உபேந்திரா அண்ணனால் கலீல் மகன் கொல்லப்படுகிறான். இதனால் கோவமடைந்த கலீல் தனது மகன் கொலைக்கு பழி வாங்க உபேந்திரா அண்ணனை கொலை செய்து விடுகிறான். இதனால் உணர்ச்சி வசப்பட்ட உபேந்திரா தன் அண்ணன் மரணத்திற்கு பழி தீர்க்க பலரை கொலை செய்கிறார். இப்படி கேங்ஸ்டராக மாறும் உபேந்திரா எப்படி கேங்ஸ்டர் கிங்காக மாறுகிறார் என்பதே படத்தின் கதை.

1945 சுதந்திர போராட்டம் அதற்கு பிந்தைய கால கட்டத்தில் கதை நகர்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கன்னட படமான கேஜிஎப் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது அதே போல இந்த படமும் முழுக்க முழுக்க கேஜிஎப் ஐ பின்பற்றியே எடுக்கப்பட்டுள்ளது.

படத்தில் கேஜிஎப் இன்ஸ்பிரிஷன் இருக்கலாம் அதற்காக கேமரா, கதை, திரைக்கதை, இசை, எடிட்டிங் வரை அனைத்தையும் காப்பியடித்து எடுத்தால் என்ன சொல்வது. அப்படி தான் இந்த படத்தை பார்க்கும் போது தோன்றியது. குறிப்பாக படம் முழுவதும் கருப்பு வண்ணம் அதிகம் காணப்பட்டது. அது எப்படி என்றால் சுவர் முதல் மண் வரை பெரும்பாலும் கருப்பு நிறமே. நிறைய இரவு காட்சிகள் வேறு.

கேங்ஸ்டர் படம் என்பதற்காக சும்மா சும்மா சுடுவதும் , கத்தியால் குத்தி இரத்தத்தை காட்டுவதும் எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. அதே போல சும்மா சும்மா கோழி தலையை வெட்டுவது போல மனிதர்களின் தலையை வெட்டிக்கொண்டே இருந்ததை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

கேங்ஸ்டர் படம் என்றால் நிறைய கதாப்பாத்திரங்கள் வரும். கேஜிஎப் படத்திலும் நிறைய கதாப்பாத்திரங்கள் வந்தன. ஆனால் சிறிது நேரத்தில் அவர்களின் கேரக்டர் நமது புரிந்து விடும். ஆனால் இந்த படத்தில் என்ன தான் சொல்ல வராங்க என்றே யூகிக்கவே முடியாத அளவுக்கு ஏகப்பட்ட கேரக்டர் வந்து வந்து போகின்றனர்.

மொத்தத்தில் கேஜிஎப் படத்தை அப்படியே எடுத்து வைத்திருந்தால் கூட சூப்பராக இருந்திருக்கும். ஆனால் மொத்தமாக சொதப்பி வைத்திருக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.