நியூஸ் 7தமிழ் செய்தி எதிரொலியால், இதய நோயால் பாதிக்கப்பட்ட 4 -வயது சிறுவனுக்கு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் உதவியால் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருநாழி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரஞ்சித்- சரண்யா தம்பதிகள். இவர்களின் 4 வயது மகன் கஜனுக்கு இதயத்தில் துளை மற்றும் இதயத்திற்கு வந்து செல்லும் ரத்தம் மாற்று குழாயில் பிரச்சனை உள்ளது. இதனால் அந்த சிறுவனுக்கு 5 வயதிற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏற்கனவே தங்களிடம் இருந்த பணத்தை வைத்து, ரஞ்சித்- சரண்யா தம்பதியினர் இதயத்துளை அடைப்பு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மேற்கொண்டு சிகிச்சை மேற்கொள்ள 7 லட்சம் தேவைப்படும் நிலையில், அவ்வளவு பண வசதி இல்லை என்று, சிறுவன் கஜன் என்னை காப்பாற்ற எல்லாரும் உதவி செய்யுங்க என தனது இருகையையும் கும்பிட்டு மழலை மொழியில் நேற்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ பதிவு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்திகளில் நேற்று வெளியானது.
இதனை தொடர்ந்து நியூஸ்7 தமிழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டதின் எதிரொலியாக, இன்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் சொந்த நிதியில் இருந்து, அவரது அலுவலர்கள் சிறுவனின் வீட்டிற்கு சென்று, ரஞ்சித்- சரண்யா தம்பதிகளிடம் நிதி உதவி அளித்தனர். மேலும் சுகாதாரத் துறை மூலம் இருதய அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தனர்.
அதன் பேரில் சிறுவனின் வீட்டிற்கு நேரடியாக வந்த பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரதாப் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறுவனின் தாய்-தந்தையிடம் பேசி பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு மற்றும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக சுகாதாரத்துறை வாகனத்தில் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக சென்னையிலும் அனுமதிக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா