நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமான அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவை பயன்படுத்தி ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு முன்பு ஆஜராகி,
நீட் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பாக உச்ச நீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமான அரசியல் சாசன பிரிவு 142ஐ பயன்படுத்தி ரத்து செய்யலாம் என மனுவில் கூறியுள்ளதாக தெரிவித்தார். எனவே இந்த வழக்கை அவசரமாக நாளைய தினமே விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிட ஒப்புதல் அளித்துள்ளார். மாணவர்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யவில்லை எனக் கூறி மத்திய அரசை கண்டித்து செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி பேரணி அறிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரமான அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி, மாணவர் போராட்டங்கள் தொடர்பான FIR-களை ரத்து செய்ய மத்திய அரசு கோரி உள்ளது குறிப்பிடத்தக்கது.




