முடிவுக்கு வந்தது 11 நாள் மோதல்: இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்!

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகள் அமைக்கும் கடந்த 11 நாட்களாக நடந்து வந்த தீவிர மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் பல வருடங்களாக மோதல் நடந்து வருகிறது. 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில்,…

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகள் அமைக்கும் கடந்த 11 நாட்களாக நடந்து வந்த தீவிர மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் பல வருடங்களாக மோதல் நடந்து வருகிறது. 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில், கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றிய இஸ்ரேல், ஒருங்கிணைந்த ஜெருசலேம்தான் தங்கள் நாட்டின் தலைநகர் இருக்கும் என்று அப்போது அறிவித்தது. இதற்கு பாலஸ்தீனம் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்காத நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், அதை இஸ்ரேல் தலைநகராக அறிவித்தார். இதையடுத்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் மோதல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கிழக்கு ஜெருசலேம் பகுதியில் கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் பலர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, தன்னாட்சி பெற்ற பகுதியான காசா முனையில் இருந்து, ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தியது.

ஹமாஸை, பயங்கரவாத இயக்கமாக கருதும் இஸ்ரேல், பதில் தாக்குதல் நடத்தியது. கடந்த 11 நாட்களாக கடும் மோதல் நடந்த சூழலில், காஸா பகுதியில், 65 குழந்தைகள், 39 பெண்கள் உட்பட 232 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் 12 பேர் மட்டுமே உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட பலர் கோரிக்கை வைத்திருந்தனர். இதற்கிடையே, இரு தரப்பும் போர் நிறுத்தத்துக்கு இப்போது ஒப்புக்கொண்டுள்ளது. இதை ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.