தேசிய தன்னார்வ இரத்ததான நாள் – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

இரத்ததானம் செய்யும் விழிப்புணர்வுமிக்க ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் ரத்த தான தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தன்னார்வத்துடன் இரத்ததானம் செய்து உயிர்களைக் காப்பதுடன், மனிதநேயத்தின் உயரிய மாண்பை நிலைநாட்டும் அனைத்து இரத்தக் கொடையாளர்களுக்கும் தேசிய தன்னார்வ இரத்ததான நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

அறுவை சிகிச்சை, விபத்து உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் உயிர்களைக் காக்க இரத்ததானம் இன்றியமையாதது. நாம் கொடையாக அளிக்கும் ஒவ்வொரு சொட்டு இரத்தமும், ஒரு மனிதனின் உயிரைக் காப்பதோடு மட்டுமல்லாமல், குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையையும் பாதுகாக்கிறது.

இரத்ததானம் அளிக்கும் கொடையாளர்கள், சமூகத்தின் உண்மையான உயிர்காக்கும் தூதர்களாகத் திகழ்கின்றனர். அவர்களின் தன்னலமற்ற சேவையும், உன்னதமான மனிதநேயமும் என்றும் போற்றத்தக்கவை.

தன்னார்வ இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துச்சென்று, இரத்ததானம் செய்யும் விழிப்புணர்வுமிக்க ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!

இரத்ததானம் செய்வோம்! உயிர்களைக் காப்போம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.