மாரி செல்வராஜ் இயக்கும் வாழை திரைப்படத்தின் கதை இதுதானா..?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் வாழை திரைப்படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கபட்டது என அந்த சம்பவத்தில் நேரடியாக பாதிக்கபட்ட நபர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள…

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் வாழை திரைப்படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கபட்டது என அந்த சம்பவத்தில் நேரடியாக பாதிக்கபட்ட நபர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள
கிராமங்களில் பெரும்பாலும் விவசாயத்தையே பொதுமக்கள் நம்பி உள்ளனர்.  இந்த
பகுதியில் உள்ள கிராம மக்களின் பெரும்பாலான தொழில் வாகனங்களில் வாழைத்தார்களை ஏற்றி வெளியூர்களுக்கு அனுப்புவதாகும்.

 கடந்த 1999 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் மற்றும்
கீழ நாட்டார் குளத்தைச் சேர்ந்த சிலர் வாழைத்தார் ஏற்றிக்கொண்டு ஒரு லாரியில்
மேல் அமர்ந்து சென்றுள்ளனர். எதிர்பாராத விதமாக லாரி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள
பேட்மாநகரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது சாலையில் இருந்து பள்ளத்தில்
கவிழ்ந்தது.

இந்த விபத்தில் புளியங்குளத்தை சேர்ந்த 15 பேரும், கீழ நாட்டார் குளத்தைச் சேர்ந்த 4 பேர் என 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அந்த காலகட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக உள்ள  மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் படம் மூலம் பிரபலமானவர். இவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்னும் படத்தை முடித்துள்ளார். மேலும் கடந்த வருடம் நவம்பர் மாதம் புதிதாக ஒரு படத்தை இயக்கத் தொடங்கினார்.

இந்த படம் முழுக்க ஸ்ரீவைகுண்டம் சுற்றுவட்டாரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. மாமன்னன் படத்திற்கு பிறகு இயக்கும் படத்திற்கு வாழை என பெயரிடப்பட்டது. இந்த படம்  1999 ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை வைத்து  எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீவைகுண்டம்  மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழை தாருடன் ஒரு லாரி கவிழ்ந்து விழுவது போல் காட்சிகள் எடுக்கப்பட்டது. 1999ம் ஆண்டு நடந்த விபத்தில் பனிமாலா என்ற பெண்மணி  இரண்டு கால்களையும் இழந்து கடந்த 24
வருடங்களாக வீட்டில் முடங்கியுள்ளார்.

இவருக்கு சுமார் 24 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 4 வருடத்தில் இந்த கோர சம்பவம்
நடந்ததாகவும், அதன் பின்  மூன்று மாதத்தில் தனது கணவர் இறந்து விட்டதாகவும், தனது மகனை படிக்க வைக்க மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க உத்தரவிட்ட பின்னும் தனக்கு ஆயிரம் ரூபாய் தான் வழங்கப்படுகிறது என்று கூறுகிறார். மேலும் நான் எனது சொந்த காலில் நிற்க ஆசைப்படுகிறேன். எனக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கவும், எனது வாழ்வாதாரம் உயர ஏதாவது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.