“தாய்மாமன் தடியடி திட்டமா?” – செவிலியர்கள் கைதுக்கு உதயநிதி கண்டனம்!

போராடும் செவிலியர்களை மட்டுமின்றி அவர்களின் குழந்தைகளையும் தாக்குவதற்கு பெயர் என்ன தாய்மாமன் தடியடி திட்டமா என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

இந்த நிலையில் செவிலியர்கள் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நிரந்தரம் – சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் செவிலியர்கள் மீது காவல்துறையினரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

எதிர்க்கட்சியாக இருந்த போது, ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்ன இன்றைய கோமாளி ஆட்சியாளர்கள், இன்றைக்கு செவிலியர் போராட்டத்திற்கு முதல் ஆளாக காவல்துறையை அனுப்பி அராஜகம் செய்கின்றனர்.

ஒருபக்கம், போராட்டக்களத்தில் சிறிய இடத்தில் செவிலியர்களை அடைப்பது – மின்சாரத்தை நிறுத்துவது – உயிர் வேணுமா வேண்டாமா என்று மிரட்டுவது என அத்துமீறும் இந்த ஆட்சியாளர்கள் – மறுப்பக்கம், Abusive Warriors மூலம் செவிலியர்களையும் – அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது அநாகரிகத்தின் உச்சம்.

செவிலியர்கள் மீது சிறு கீறல் விழுந்தாலும் பொறுக்க மாட்டோம் என அன்றைக்கு punch dialog பேசிவிட்டு, இன்றைக்கு போராடும் செவிலியர்களை மட்டுமின்றி அவர்களின் குழந்தைகள் மீது கூட தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடு.

குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் என்ன தாய்மாமன் தடியடி திட்டமா? பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரை துடைப்பதற்காக நீளும் முதல்வரின் கரங்கள், உயிர்காக்கும் செவிலியர்களின் உண்மைக் கண்ணீரைத் துடைக்க மறுப்பது ஏன்?

செவிலியர்கள் மீதான அடக்குமுறையை உடனே நிறுத்தி, அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.