ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன் பதவியில் இருந்து திடீர் விலகல்!

அனைத்து வடிவங்களிலும் இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஹர்மன்பிரீத் கவுர் அறிவித்தார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பல ஆண்டுகளாக அணியை வழிநடத்தியவர் ஹர்மன்ப்ரீத் கவுர். அதிரடி பேட்டிங், ஆல்-ரவுண்ட் திறமை மற்றும் தலைமைப் பண்பால் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தவர்.

கடந்த 2025-ம் ஆண்டு இந்திய மகளிர் அணி தனது முதல் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது, அந்த அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாக இருந்தார். 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்திய அணியை வழிநடத்தி தங்கப் பதக்கம் வெல்லச் செய்தார். மேலும், 2026-ம் ஆண்டு பிப்ரவரியில் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.

இந்த நிலையில், அனைத்து வடிவங்களிலும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ஹர்மன்ப்ரீத் கவுர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அந்த பதிவில், இது எளிதான முடிவு அல்ல என்றும், இந்த முடிவுடன் பல ஆண்டுகளின் நினைவுகள், உணர்வுகள், தியாகங்கள் மற்றும் மறக்க முடியாத தருணங்கள் இணைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“கேப்டனாக கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அந்த முடிவுகள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சில முடிவுகள் தனிப்பட்ட முறையில் எனக்கு பாதிப்பையும் ஏற்படுத்தின. ஆனால், ஒவ்வொரு முடிவும் அணியை சிறந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில்தான் எடுக்கப்பட்டது” என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்போது அணி திறமை, நம்பிக்கை மற்றும் எதிர்காலத்துக்கான வலிமையுடன் நல்ல நிலையில் இருப்பதாக நம்புவதாகக் கூறியுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர், “நான் எனது கடமையைச் செய்து விட்டதாக உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், இந்திய கிரிக்கெட் மீதான தனது அன்பு ஒருபோதும் மாறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அணியின் சக வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், உதவி ஊழியர்கள், நிர்வாகம், பிசிசிஐ, குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் என தனது பயணத்தில் துணைநின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், “Captaincy ends. The journey continues” என்ற உணர்வுடன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

ஹர்மன்ப்ரீத் கவுர் விலகியுள்ள நிலையில், ஸ்மிருதி மந்தனா அடுத்த கேப்டனாக வருவதற்கான முக்கிய வாய்ப்புள்ள வீராங்கனையாக பார்க்கப்படுகிறார்.எனினும், அடுத்த கேப்டன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிசிசிஐ தரப்பில் இருந்தே வெளியாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.