தமிழ்நாட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவினர் தொடர்புடைய இடங்களில் அதிகளவில் ஐடி ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஐடி ரெய்டுகளுக்கு அரசியல் காரணங்கள் உள்ளன என பரவலாக பேசப்படுகிறது. இது உண்மைதானா ? வருமானவரித்துறை சோதனை என்பது எதன் அடிப்படையில் நடத்தப்படுகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஒப்பந்ததாரர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டன. 30க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்ன. இவர்களிடமிருந்து கணக்கில் வராத கோடி கணக்கான பணம் கண்டெடுக்கப்பட்டது. இவர்களில் பலருக்கு அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.
அப்படிபட்ட சூழலில் அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனை மேற்கொள்ளபட்டதா என வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் 5 முதல் 6 ஒப்பந்ததாரர்கள் மட்டும் கோலோச்சி வந்தனர். இவர்களை தவிர வேறு யாருக்கும் ஒப்பந்தங்கள் வழங்கப்படவில்லை. இவர்களுடைய கடந்த 10 ஆண்டு வளர்ச்சி என்பது அபரிதமாக உள்ளது. ஆனால் இவர்களுக்கு அவ்வளவு பெரிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு விடையில்லை என்றனர்.
மேலும், இவர்கள் வருமானவரித்துறையில் சமர்பித்துள்ள கணக்கில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இவற்றை எல்லாம் முழுமையாக எங்களது ரிசர்ச் விங் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது சோதனைகள் நடைபெற்று வருகின்றன.தற்போது வருமானவரித்துறை சோதனைக்கு உள்ளான நிறுவனங்களுக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் நிறுவனங்களுக்கும் தொடர்பு உள்ளது. அவர்கள் வேறு சில வியாபாரங்கள் இவர்களோடு இணைந்து செய்து வருவதாக தெரிகிறது. எங்களுக்கு அதனைப்பற்றி கவலை இல்லை.
வருமானவரித்துறையில் இவர்கள் சமர்பித்துள்ள ஐடி ரிட்டன்ஸில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இவர்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கு விடையில்லை. இவற்றைதான் எங்களது ஐடி ரிசர்ச் விங் கண்டுபிடித்துள்ளது.
மதுரையில் நடைபெற்ற சோதனையில் 500 கோடி ரூபாய் வரை ரொக்கப்பணம் கைப்பற்றபட்டுள்ளது. இதற்கு ஒப்பந்ததாரர்களிடம் எவ்வித கணக்கும் இல்லை. இந்த பணத்தை எண்ணுவதற்கு பல்வேறு வங்கிகளிடம் இருந்து பணம் எண்ணும் மிஷினை இரவலாக பெற்று எண்ணினோம். இதுதொடர்பான அனைத்து தகவலும் எங்களது தலைமையகமான டெல்லிக்கு அனுப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 6 பெரிய ஒப்பந்ததாரர்களில் இரு ஒப்பந்ததாரர்கள் சம்பந்தபட்ட இடங்களில் மட்டும் சோதனை நடைபெற்றுள்ளது. மற்றவர்கள் குறித்த புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அவர்கள் சம்பந்தபட்ட இடங்களில் வரும் நாட்களில் சோதனை இருக்கும். இவர்கள் அனைவருக்கும் தேவையான பணத்தை முதலீடு செய்தவர்கள் அரசியல்வாதிகளா என்பது வரும் நாட்களில் தெரியவரும் என்றனர்
இராமானுஜம்.கி.








