நாட்டில் இளைஞர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளுதல் அதிகரிப்பா? மத்திய அரசு விளக்கம்

நாட்டில் இளைஞர்கள் உயிரை மாய்த்து கொள்வது அதிகரித்து வருவது மத்திய அரசின் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவர் வேலையின்மை மற்றும் வேலையிலிருந்து நீக்கப்பட்ட மனச்சுமை காரணமாக இளைஞர்கள்  உயிரை மாய்த்து…

நாட்டில் இளைஞர்கள் உயிரை மாய்த்து கொள்வது அதிகரித்து வருவது மத்திய அரசின் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.

மக்களவையில் உறுப்பினர் ஒருவர் வேலையின்மை மற்றும் வேலையிலிருந்து நீக்கப்பட்ட மனச்சுமை காரணமாக இளைஞர்கள்  உயிரை மாய்த்து கொள்வது அதிகரித்துள்ளதா? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு நலன் துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி, மத்திய குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள தகவலின் படி நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021ம் ஆண்டில் 1,64,033 பேர் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர்.

ஆனால் இவர்கள் அனைவரும் வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்டதன் மனச்சுமை காரணமாக உயிரிழக்கவில்லை என்றும் உயிரை மாய்த்துக் கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு இந்தியாவில் “பிரதம மந்திரி வேலைவாய்ப்பு” திட்டத்தின் கீழ் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2021ம் ஆண்டில் 18,925 உயிரை மாய்த்துக் கொண்டு உள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஒட்டுமொத்த இந்தியாவிலும் கடந்த 2021ம் ஆண்டில் நடந்த உயிரை மாய்த்து கொள்வதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 22 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.