உலக அழகி ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
1994ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான இருவர் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து ஜீன்ஸ், தாளம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மணிரத்னத்தின் இயக்கத்தில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பல ஆண்டுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தநிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்கள் தயாரித்து மோசடி அரங்கேற்றியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியிடம் கேன்சர் நோயை குணப்படுத்தும் மூலிகை மருந்து இருப்பதாகக் கூறி ஆன்லைன் மூலம் மர்ம கும்பல் ஒன்று தொடர்பு கொண்டுள்ளது. இதனை உண்மை என நம்பிய ராணுவ அதிகாரி அந்த கும்பலிடம் மருந்துக்காக இந்திய மதிப்பில் சுமார் 1 கோடியே 80 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.
பின்னர் அவர்களை பலமுறை தொடர்பு கொண்டும், தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராணுவ அதிகாரி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இருவர், கானா நாட்டைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அதில் நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படம் மற்றும் பெயர் பதிந்திருந்தது தெரியவந்தது. இவர்களிடம் விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளியாகின.
இந்தக் கும்பல் திருமண வரன் பார்க்கும் தளங்கள், டேட்டிங் தளங்கள் போன்றவற்றில் போலி அடையாளங்களை உருவாக்கி பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் உருவாக்கப்பட்ட போலி பாஸ்போர்ட், 6 செல்போன்கள், 11 சிம் கார்டுகள், லேப்டாப்புகள், பிரிண்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதோடு 10 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மோசடி கும்பல் ஐஸ்வர்யா ராய் புகைப்படத்துடன் கூடிய பாஸ்போர்ட்டை வைத்து என்ன செய்ய திட்டமிட்டார்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.