ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5000 அபராதமா? காவல் ஆணையர் விளக்கம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் பில்லரில் அதிக வாகன ஒலி எழுப்புவது…

புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் பில்லரில் அதிக வாகன ஒலி எழுப்புவது தடுக்கும் வகையில் வரும் ஜூலை 3ஆம் தேதி வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று அசோக் பில்லர் பகுதியில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் ஒலி மாசு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது:
ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் வாகன ஒலியை எழுப்பும் நபர்களுக்கு தற்போது 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதிக ஒலி எழுப்புவதை கண்டுபிடிப்பதற்காக சவுண்ட் ட்ராக் மீட்டர் என்ற கருவியை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பயன்படுத்த அனுமதி பெற்று, அதை பயன்படுத்தி ஒலி மாசு ஏற்படுத்துபவர்களிடம் அபராதம் வசூலிக்க உள்ளோம்.

மேலும் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் இதற்கான அபராதம் 10 மடங்கு அதிகமாக ஆயிரம் ரூபாய் அளவில் வசூலிக்கப்படும். மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுபவருக்கு பத்தாயிரம் ரூபாயும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் குடிபோதையில் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு 15,000 ரூபாய் வரை நீதிமன்றம் மூலமாகவும் அபராதம் விதிக்கப்படுகிறது.

போக்குவரத்துத் துறை மூலமாக புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சில அபராதங்கள் வசூலிக்கப்படுகிறது. அனைத்து விதமான போக்குவரத்து விதிமீறலுக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் கீழ் அபராதம் வசூலிப்பதற்கு சென்னை காவல்துறை சார்பில் தமிழக அரசுக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதி மீறலை தடுக்கவும் சாலைகளில் உயிரிழப்பை குறைக்கவும் புதிய மோட்டார் வாகன தடுப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் அளவில் போக்குவரத்து விதிமீறல் அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டால் ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் செலவில் அபராதம் வசூல் செய்யப்படும். புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டால் தற்போதைய உள்ள அபராதத்தை விட 10 முதல் 20 மடங்கு அபராதங்கள் அதிகமாக இருக்கும.

குறிப்பாக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு 100 ரூபாய்க்கு பதிலாக ஆயிரம் ரூபாய் அபராதமும், அதிவேகமாக வாகனத்தை இயக்குபவர்களுக்கு ஆயிரம் முதல் 2000 வரை அபராதம் வசூல் செய்யலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

சரக்கு வாகனம் மற்றும் குறைந்த அளவிலான பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிவேகமாகச் சென்றால் இரண்டு முதல் நான்கு ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பயணித்தால் தற்போது விதிக்கப்படும் 500 ரூபாய் அபராதம் பதிலாக 5000 ரூபாய் வசூலிக்கப்படும். அதிக அளவு பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு 2500 ரூபாய் அபராதம் அதற்கு பதிலாக 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் என்றார் சங்கர் ஜிவால்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.