ஜூலை 11ந்தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக் குழுவில் அக்கட்சியின் புதிய அத்யாயம் எழுதப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில் அந்த பொதுக் குழுவிற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன,
அதிமுகவில் நீடித்து வரும் ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா என்கிற சர்ச்சைக்கு கடந்த 23ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிலேயே தீர்ப்பு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதே நேரம் பொதுக்குழுவில் தங்கள் செல்வாக்கை நிரூபித்த எடப்பாடி பழனிசாமி தரபபினர் அடுத்த மாதம் 11ந்தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக் குழுவில் ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்றி சலசலப்புகளுக்கெல்லாம் முடிவுகட்ட ஆர்வமாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக்கி, அதிமுவில் புதிய அத்யாயத்தை எழுதத் தொடங்கும் நாளாக ஜூலை 11ஐ அவர்கள் குறித்து வைத்துள்ளதுள்ளனர்.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்திலேயே கடந்த பல ஆண்டுகளாக அதிமுகவின் பொதுக் குழு கூட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், ஜூலை 11ந்தேதி பொதுக் குழுக் கூட்டத்தை நடத்த சென்னையில் வேறு இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கொண்ட குழு , பொதுக் குழு கூட்டத்தை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ், , தளவாய் சுந்தரம் ஆகியோர் கொண்ட குழு இன்று காலை முதலே, அதிமுசு பொதுக் குழு நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் ஆலந்தூர், கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ, கிழக்குக் கடற்கரைச் சாலையில் விஜிபிக்கு சொந்தமான இடம், போன்ற பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு அவர்கள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. மற்றொருபுறம் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள், ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது செல்லாது என அறிவித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த எதிர்ப்புக்கிடையே நடைபெறும் பொதுக் குழு என்பதால் இடத்தை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் குழு.







