இலங்கையை விட்டு வெளியேற ராஜபக்ச குடும்பத்தினர் தயாராகி வருவதாக வெளியான செய்திகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் ராஜபக்ச குடும்பம் தான் இதற்கு காரணம் என மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள மக்களின் கொந்தளிப்பை கண்டு அஞ்சிய ராஜபக்ச குடும்பத்தினர் வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நாமல் ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவதற்காக காவல்துறை அனுமதியை பெற்று ஏற்பாடுகள் செய்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை அவர் மறுத்துள்ளார்.
அதாவது, நீண்ட காலத்திற்கு தானோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களோ இலங்கையை விட்டு வெளியேற மாட்டோம் என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டை விட்டு வெளியேறும் திட்டம் எனக்கோ அல்லது எனது குடும்பத்தாருக்கோ இல்லை. நானும் எனது குடும்பமும் இலங்கையிலேயே இருக்கிறோம். நாட்டை விட்டு செல்வதில் எந்த நம்பிக்கையும் இல்லை” என்றும் பதிலளித்துள்ளார்.








