அரசு மருத்துவமனையில் ‘ரீல்ஸ்’ எடுக்க அமைச்சரே ஊக்குவிப்பதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மருத்துவமனைகளில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பணியாளர்கள் பற்றாக்குறையைச் சரிசெய்வதிலும் அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அரசு மருத்துவமனைகளில் தவெகவினர் ‘ரீல்ஸ்’ எடுப்பதால் பொதுமக்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை என்று தவெக அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்கள் அனைவரும் ஏற்கனவே நோயின் பாதிப்பாலும், வலியாலும் அவதியுற்று அமைதியை நாடி வரும் சூழலில், இத்தகைய விளம்பர ஆரவாரங்களை நியாயப்படுத்துவது அமைச்சரின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

குறிப்பாக, மதுரை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்குப் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் ஒரு எளிய நிகழ்வுக்கு, இத்தனை கேமராக்களுடனும், பெருங்கூட்டத்துடனும் நுழைந்து ஆரவாரம் செய்தது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாமல் மக்கள் தவிக்கும் போது, நோயாளிகளின் வலியை விட அரசுக்கு விளம்பரமே முக்கியமாகத் தெரிகிறதா என்ற கேள்வி எழுகிறது.

எனவே, மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் புனிதமான அரசு மருத்துவமனைகளை விளம்பரக் கூடாரமாக மாற்றுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அரசை வலியுறுத்துகிறேன். மேலும், போலி விளம்பர அரசியலைத் தவிர்த்து, மருத்துவமனைகளில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பணியாளர்கள் பற்றாக்குறையைச் சரிசெய்வதிலும் அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.