தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றார் மாணிக்கம் தாகூர்!

காங்கிரஸின் புதிய மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு மாநில காங்கிரஸின் புதிய மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாணிக்கம் தாகூர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழாவில், முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தனது பொறுப்புகளை மாணிக்கம் தாகூரிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது மாணிக்கம் தாகூர் பேசுகையில், “141 ஆண்டு கால வரலாறு காங்கிரஸ் கட்சி. 20 பேர் கொண்டு தொடங்கிய கட்சி தான் காங்கிரஸ். தலைவர் பதவியை சிறப்பாக செயலாற்றி உள்ளார் செல்வப் பெருந்தகை. கடந்த இரண்டு வருடமாக செல்வப் பெருந்தகை செய்த செயல்கள் அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துக்களை மீட்டெடுத்த பெருமை முன்னாள் தலைவரையே சாரும். கிராமிய கமிட்டிகள் அமைத்தது சிறப்பாக அமைந்துள்ளது.

2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோத்த பிறகு திருநாவுக்கரசிடம் மாநில தலைவர் பதவி ஒப்படைக்கப்பட்டது. தோல்விக்கு பிறகு பலம் வாய்ந்த கட்சியாக மாற்ற காங்கிரஸ் கட்சி மாற்ற முயற்சித்தார்கள். கே.எஸ்.அழகிரிக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்க வேண்டும் என கேட்டு டெல்லிக்கு செல்லவில்லை. மாநில பதவி பொறுப்பு அழகிரிக்கு தானாக வந்தது. சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்டவை நமக்கு ஒரு பாடம் கற்று தந்தது. அனைத்து பாடங்களையும் ஏற்றுக் கொண்டு, அடுத்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அனைவருக்கும் உரிய இடம் கொடுக்க வேண்டுமென தெரிய வந்தது.

மாநிலத் தலைவர் பதவி என்பது ஒரு தொடர் ஓட்டப்பந்தயம். ஒவ்வொரு தலைவர்களின் மதிப்பை நான் குறைத்து மதிப்பிட முடியாது. ஆட்சியில் இருந்தும் இல்லாத போதுமே கடின உழைப்பால் தற்பொழுது அமைச்சர் பதவிகள் இடம் பெற்றுள்ளோம். செல்வப் பெருந்தகை செய்த செயல்களை வரலாறு சொல்லும். உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. பல குறைபாடுகள் என்னிடம் இருக்கலாம், அனைத்தும் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நான் பார்க்கிற பார்வை வேலையாக இருக்கலாம், என்னை பொருத்தவரை காங்கிரஸ் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறேன்.

காங்கிரஸ் கட்சி அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் அனைவரும் தங்களுடைய ஈகோகளை விட்டுவிட்டு பணிகளை செய்ய வேண்டும். ராகுல் காந்தி ஒழிக என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த பிறகு தான் அவருக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அதற்கு முன்பாக எந்த ஒரு தகவலையும் அவரைப் பற்றி பேசவில்லை. திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் யாரைப் பற்றி நான் எதுவும் பேசவில்லை. காங்கிரசை தொட்டால் அது யாராக இருந்தாலும் திருப்பி அடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.