“தனியார் நிறுவனங்களின் நலனுக்காக, ஆவின் பால் விநியோகத்தை குறைக்கிறதா தவெக அரசு?” – நயினார் நாகேந்திரன்

ஏழை எளிய மக்களின் ஆரோக்கியத்தை தவெக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களின் அடிப்படைத் தேவையான ஆவின் பால் விநியோகம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவது குறித்து பலமுறை நாம் கேள்வியெழுப்பியும், மக்களின் ஆரோக்கிய சீர்கேடு குறித்து எச்சரித்தும், பால் உற்பத்தியைப் பெருக்க முதல்வர் விஜய் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ. 38 லிருந்து ரூ. 44 ஆக உயர்த்தி அரசாணை வெளியானதில் இருந்து, அந்த நிதியிழப்பை ஈடுகட்ட ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் விநியோகம் கிட்டத்தட்ட 10% வரை குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏழை எளிய மக்களின் ஆரோக்கியத்தை தவெக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.

செலவுகள் கூடும் பொழுது, அதற்கான வரவுகளை எப்படிப் பெருக்குவது என்பது குறித்து சிந்திப்பதை விட்டுவிட்டு, உற்பத்தியை குறைப்பது என்ன மாதிரியான நிர்வாகம்? தனியார் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்காக, ஆவின் விநியோகத்தை திட்டமிட்டே குறைக்கிறதா தவெக அரசு? தமிழகத்தில் தற்போது நடப்பது அனைவருக்குமான அரசா? அல்லது தனியாருக்கான அரசா?

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.