சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று முன்தினம் (20-09-26) மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத்தாழ்வு பகுதி நேற்று 21-09-26) காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மத்தியகிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து, காலை 08.30 மணி அளவில் மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையும். இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர- தெற்கு ஓடிசா கடலோர பகுதிகளை சென்றடையக்கூடும்.
சுமார் 4.5 முதல் 7.6 கி.மீ உயரம் வரை மத்திய தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 5.8 முதல் 7.6 கி.மீ உயரம் வரை தென்கிழக்கு அரபிக்கடல் முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சி வரை கேரளா, தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் நாளை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




