இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்தும் அளவுக்கு உடற்தகுதியுடன் இருக்கிறாரா? என்பதில் தனக்கு சந்தேகம் உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட்டுகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டில் மட்டும் இந்திய அணி 68 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 5 டெஸ்ட் போட்டிகளும், 21 ஒருநாள் போட்டிகளும், 42 இருபது ஓவர் போட்டிகளும் அடங்கும். ஆனால் இதில் 2 டெஸ்ட், 8 ஒருநாள் போட்டி, 29 இருபது ஓவர் போட்டிகள் உள்பட 39 போட்டிகளில் மட்டுமே ரோகித் சர்மா விளையாடியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் காயம் காரணமாக ரோகித் சர்மா சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. பல்வேறு காரணங்களால் நல்ல போட்டிகளில் கூட ரோகித் சர்மா விளையாட வாய்ப்பில்லாமல் போனது. இது ஒருபுறம் இருக்க ரோஹித் சர்மா உடற்தகுதி குறித்த விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கபில்தேவ், ரோகித் சர்மா கிரிக்கெட் திறன் குறித்து எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலியுடன் இணைந்து ரோகித் சர்மா இந்திய அணியின் பேட்டிங்-க்கு பக்க பலமாக இருந்துள்ளார். ஆனால் தற்போது அவரது உடல்தகுதி குறித்துதான் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா?. ஒரு அணி தலைவனாக இந்த உடல்தகுதி போதுமா?. ஏனெனில் கேப்டன் என்பவர் அனைத்து வீரர்களுக்கும் முன்மாதிரியாக இருப்பவர். மற்ற வீரர்கள் தங்கள் அணியின் கேப்டனை நினைத்து பெருமை கொள்ளும்படி உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த வீரர்களின் உடற்தகுதி சிறப்பாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரோகித் சர்மா தனது உடற்தகுதியை மேம்படுத்தினால் மற்ற வீரர்களுக்கும் அவர் முன்மாதிரியாக இருப்பார். அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவையும் கோலியையும் நம்பி உலக கோப்பையை இருக்கக்கூடாது. இளம் வீரர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியின் போது கடைசியாக ரோகித் சர்மா விளையாடினார். அதன்பிறகு காயம் காரணமாக 3-வது ஒருநாள் போட்டியிலும், இலங்கைக்கு எதிரான போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.