இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறத. இதில் டி20 தொடரில் முதல் போட்டியில் போட்டியில் இந்திய அணியும், 2வது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. தொடரை யார் கைப்பற்ற போவது என்ற கடைசி டி20 போட்டி நேற்று நடைப்பெற்றது. கோப்பையை கைப்பற்றும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்கின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராஜ்கோட்டில் நடைபெற்ற இப்போட்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷன் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இஷன் கிஷன் முதல் ஓவரிலேயே 1 ரன் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து ராகுல் திரிபாதி களம் இறங்கினார். பவர்பிளே வரை அதிரடி காட்டிய ராகுல் திரிபாதி 16 பந்தில் 35 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
இதையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி மைதானத்தின் நாலாப்புறமும் சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களுக்கு உற்சாகப்படுத்தினார். அதிரடியாக ஆடிய அவர் 21 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மறுபுறம் சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக ஆடி வந்த சுப்மன் கில் 36 பந்தில் 46 ரன் எடுத்திருந்த நிலையில் ஹசரங்கா பந்து வீச்சில் போல்ட் ஆனார்.
தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஹர்த்திக் பாண்டியா, தீபக் ஹூடா இருவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 45 பந்தில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 112 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர் நிசங்கா, 15 ரன்னிலும் குசல் மெண்டிஸ் 23 ரன்னிலும் வெளியேறினர். பின்னர் வந்த வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். பெர்னண்டோ 1 ரன்னில் வெளியேறினார். தனஞ்ஜெய டி சில்வா 22 ரன்னிலும், அசலங்கா 19 ரன்னிலும், கேப்டன் தசன் ஷனகா 23 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.இறுதியில், 16.4 ஓவரில் இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இலங்கையை 91 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்தியா அணியில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக், ஹர்திக் பாண்டியா, சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த தொடரின் நாயகன் விருது அக்சர் படேலுக்கும், நேற்றைய ஆட்டநாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கும் வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.