Y- பிரிவு பாதுகாப்பில் இருப்பவர், என் உயிரெடுக்க உத்தரவிட்டிருப்பதாக ஊடக நண்பர் என்னிடம் சொன்னார். இதை உலகிற்கு சொல்கிறேன் என முதலமைச்சருக்கும், தமிழக காவல்துறைக்கும் (Tag) இணைத்து திராவிட சிந்தனையாளர் நாஞ்சில் சம்பத் ஒரு டுவிட்டர் பதிவு போட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய நாஞ்சில் சம்பத், தாம் தொடர்ந்து பாஜகவினருக்கு எதிராக பேசி வருவதால் தாம் செல்லும் இடங்களில் எல்லாம் தாக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினார். இரு மாநிலத்திற்கு ஒருத்தி ஆளுநரா ? என ,நான்கேட்டதற்கு, அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை தரக்குறைவாக பேசுவதாக ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சாட்டினார் என்று குறிப்பிட்டார். அதற்கு விளக்கமளித்த நான்,
’சொல்லடி சிவசக்தி, எனைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ -இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?
சொல்லடி, சிவசக்தி -நிலச்
சுமையென வாழ்ந்திட புரிகுவையோ ?’
என பாரதியாரே ஒருமையில் பாடியுள்ளார். இது மண்ணின் மரபு எனக் கூறியதை நாஞ்சில் சம்பத் சுட்டிக்காட்டினார். மேலும்
கந்தா கடம்பா கதிர்வேலா
காத்திட வருவாய் சிவபாலா
கார்த்திகை மைந்தா கதிர்வேலா
காத்திட வருவாய் சிவபாலா!
என கடவுளை கூட ஒருமையில் அழைப்பது இந்த மண்ணின் பெரும் வழக்கம் என்றும் அவர்களுக்கு புரிய வைத்தேன். ஆனால் அண்ணாமலை மாநில தலைவரான பிறகு என் மீதான தாக்குதல் அதிகரிக்க தொடங்கி விட்டன என குற்றம் சாட்டினார்.
மேலும், நான் குடியிருக்கும் பட்டணபாக்கம் வீடு பாஜக தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. அங்குள்ள உணவகம் ஒன்றில் வைத்து என்னை கொலை வெறியுடன் ஒரு கும்பல் தாக்க முயன்றது. உணவக ஊழியர்கள்தான் என்னை அன்று காப்பாற்றினர். பாஜகவின் டால்பின் ஸ்ரீதர் தலைமையிலான கூட்டமே இந்த செயலில் இறங்கியது.
தேன் சிந்தும் திருவாசகம் என்ற தலைப்பில் பேச வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் சார்பில் அழைப்பு வந்தது. ஆனால் அங்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என காவல்துறை உயரதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் நீங்கள் பேச வர வேண்டாம் என அந்த அமைப்பினர் கூறிவிட்டனர். அதற்கு காரணம் நான் திராவிட சித்தாந்தத்தை கிராமங்கள் வரை கொண்டு செல்வதே ஆகும் என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அறந்தாங்கியில் பேச சென்றேன். அப்போதும் என்னை பாஜகவினர் தாக்க முற்பட்டனர். அப்போது மணல்மேடு ஒன்றிய பெருந்தலைவர்தான் என்னை பத்திரமாக கூட்ட அரங்கிற்கு அழைத்து சென்றார்.
விருத்தாச்சலம் செல்லும்போது என் காரை அடித்து நொறுக்கினர். அதற்கு காரணம் அவர்களின் சித்தாந்தத்தை நான் அடித்து நொறுக்குவதுதான். அதேபோல் சிவகாசியில் பூப்புனித விழாவிற்கு சென்ற என்னை கடுமையாக தாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கெல்லாம் காரணம் பெரியார், அண்ணா கருத்துகளை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நயத்துடன் மக்கள் மன்றத்தில் நான் எடுத்து வைக்கும்போது, அது பாஜகவினருக்கு ஆத்திரத்தை தருகிறது. கருத்தை கருத்தால் வெல்ல முடியாதவர்கள், கல்லை கையில் எடுக்கின்றனர். இதற்கு நான் அஞ்ச போவதில்லை. உயிர் மூச்சு இருக்கும் வரை திராவிட சிந்தாந்தங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன். என் பயணம் எங்கும் தடைபடாது. திராவிட மாடல் என்ன என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் எனது பணி தொடரும் என்றார்.
இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம் கேட்டபோது, ஓய் பிரிவின் பாதுகாப்பின் கீழ் இருப்பவரால் என் உயிருக்கு ஆபத்து என குறிப்பிட்டுள்ளார். ஓய் பிரிவு பாதுகாப்பின் கீழ் நாட்டில் 150 பேருக்கு மேல் உள்ளனர். யார் என்பதை கூட அவரால் தெளிவாக கூற முடியவில்லை. அவரது கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் குறைந்து வருகிறது. அதனால் பரபரப்பிற்காக எதையாவது பேசி வருகிறார். சிறந்த பேச்சாளர் என அடையாளம் காணப்பட்ட சம்பத், நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் பேசுவது நிறுத்தப்பட வேண்டும். ஒரு ஆளுங்கட்சி பிரமுகர் இப்படி பேசுவது அபத்தமாக உள்ளது. உண்மையில் அவர் உயிருக்கு பாதுகாப்பில்லை என கருதினால் டிஜிபியிடம் சென்று புகார் கொடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இப்படி நடந்து கொள்வது நாகரீகமான செயல் அல்ல என்றார்.
இவரது டுவிட்டர் பதிவிற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரே சேர சமூக வலைதளத்தில் காணப்படுகிறது.
இராமானுஜம்.கி








