தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் தொடர்பாக 2014-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். மக்கள் நலப்பணியாளர்களுக்கு நிரந்தர பணி நியமனம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உயிரிழந்த ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்துடன் பணி நியமனம், அரசாணை 66ஐ ரத்து செய்ய வேண்டும் மற்றும் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் என்ற பெயரிலேயே தங்களை அழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் முன்பு அவர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களை கலைந்து போக வலியுறுத்தியும் அவர்கள் கேட்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் நேற்று இரண்டாவது நாளாகவும் போராட்டம் நடபெற்றது. நேற்று இரவும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், இன்று காலை மீண்டும் மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தினர் தங்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ளதாக தெரிவித்த அவர்கள், தமிழ்நாடு அரசு உடனடியாக கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். கோரிக்கைகளை நிறைவேறும் வரை போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.
– இரா.நம்பிராஜன்