ரேசன் அட்டை வைத்திருப்போர் எந்த கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கலாம் என அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணியிலிருந்து கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில், “குடும்ப அட்டைதாரர்கள் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. கைரேகை வைப்பதில் கோளாறா? அல்லது POS முறையில் கோளாறா? என்பதை அறிய விரும்புகிறேன். மேலும் OAP பெற்றால் அட்டை ரத்தாகுமா?” என எம்.எல்.ஏ. பரந்தாமன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, “10.92 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ரேசன் அட்டை வைத்திருப்போர் எந்த கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம். குடும்ப அட்டை தாரர்களுக்குப் பொருட்கள் வழங்குவது கைரேகை சரிபார்க்கும் முறையில் தங்குதடையின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கைரேகை சரியாகப் பதிவாகாவிட்டால், Proxy முறையில் பொருட்கள் வழங்கப்படும். முதியோர், மாற்றுத்திறனாளிகள் கடைகளுக்கு நேரடியாக வந்து செல்ல முடியாவிட்டால், அவர்களுக்கு பதில் வேறு ஒரு குடும்பதாரர் பொருட்களை வாங்க அங்கீகார அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி தங்குதடையின்றி பொருட்கள் விநியோகமும் முதியோர் உதவித்தொகை வாங்குவோருக்கும் OAP அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.







