தமிழ்நாட்டில் பட்டியலின பெண் என்பதற்காக ஊராட்சி தலைவராக பதவியேற்க முடியாமல் இருப்பது தான் சமூக நீதியா? என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடந்த விஸ்வகர்மா யோஜனா திட்ட கைவினை கலைஞர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “நீங்கள்தான் நாட்டின் உண்மையான கதாநாயகர்கள். விவசாயமும் தொழிலும் இல்லாமல் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. அதேபோல் நீங்கள் இல்லாமல் இந்த நாட்டில் எந்தப் பணிகளும் நடக்கப் போவதில்லை. இத்திட்டத்தை பிரதமர் தைரியமாக நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தைக் கூட சில தலைவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.
கவனிக்கப்படாமல் உள்ள துறைகளை பிரதமர் கவனித்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். விஸ்வகர்மாக்கள் தான் புனிதமான ஆத்மா. நாட்டை சிறப்பாக கட்டமைத்தவர்கள் விஸ்வகர்மா. தலைசிறந்த கலைஞர்களாக திகழ்பவர்கள். உறுதியான பாரதம் உருவாக விஸ்வகர்மாக்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பிரதமர் கருதுகிறார். புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்ட போது முதலில் பாராட்டு தெரிவித்தது விஸ்வகர்மாவினர்களுக்குத்தான்.
பொறியாளர்கள் திட்டமிட்டு கொடுத்தாலும் அதற்கு வியர்வை சிந்தி சிறப்பாக செயல்
வடிவம் கொடுப்பது நீங்கள்தான். இத்திட்டத்தின் முழு நோக்கம் உங்களது
வாழ்வாதாரம் மேம்பாடு அடைவதுடன் சமுதாயத்தில் உயர்ந்த பங்கையும் வகுக்க
வேண்டும் என்பதுதான்.
சிலர் எல்லாவற்றையும் இங்கு அரசியலாக பார்க்கிறார்கள். தவறான தகவலை பரப்புகிறார்கள். குலக்கல்வித் திட்டம் என்பது தந்தை பார்த்த தொழிலை மகன்தான் பார்க்க வேண்டும் என்று பரப்புகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கான சமூக நீதி மறுக்கப்படுகிறது. சமுதாயத்தில் பின் தங்கியவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டும்.
குடிநீர் திட்டம், மின்சார திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்காக அமல்படுத்தப்படுகிறது. எந்தத் திட்டத்திலும் வேறுபாடு காட்டப்படுவதில்லை. பிரச்னையைத் தீர்க்க வேண்டுமே தவிர பிரச்னையை அரசியல் நோக்கோடு சந்திக்கக் கூடாது. மத்திய அரசு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான வீடு கட்டும் திட்டத்தில் 40 சதவீத நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது.
இந்துமதி என்ற பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி தலைவராக பதவியேற்பதில் திமுகவினர் தடை ஏற்படுத்தி வருகிறார்கள். இரண்டு வருடத்திற்கு முன்பாக தேர்வு செய்த பின்னரும் அவர்களுக்கான சமூக நீதி மறுக்கப்படுகிறது. இவர்கள்தான் சமூக நீதியை காப்பாற்றுகிறோம் என தங்களைப் பற்றி பரப்புரை செய்து வருகின்றனர். சமூக நீதியை காப்பதாக கூறி சமூகத்தில் விஷத்தை பரப்புகிறார்கள்.
இதையும் படியுங்கள் : ‘வேறு ஒரு கோணத்தில் சந்திரமுகி…’ – படக்குழுவை வாழ்த்திய ரஜினிகாந்த்!!
மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் நிறைய குறைபாடுகள்
உள்ளன. மாநிலம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன். மக்களிடம்
நினைத்த தொழிலை தொடங்குவதற்கான போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. உங்கள் பிரச்னைகளை அறிந்து கொண்டேன். என் குடும்பத்தில் ஒருவராக உங்களை
பார்க்கிறேன். மத்திய, மாநில அரசுகளிடம் உங்கள் பிரச்னைகளை எடுத்துச் சென்று
உங்கள் குறைகளைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்வேன்” என்று தெரிவித்தார்.








