அதிமுக தலைமைக்கு வேண்டியவர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு நடைபெற்று வருவதால், இது ஒரு அரசியல் சித்து விளையாட்டோ என்ற அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நள்ளிரவு வரை தொடர்ந்த இந்த ரெய்டு தேவை ஏற்பட்டால் மீண்டும் தொடரும் என அதிகாரிகள் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
கோவை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராகவும், அதிமுகவின் அதிகார பூர்வ ஏடான நமது அம்மாவின் பதிப்பாளருமான சந்திரசேகர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் வேண்டியவர் ஆவார். இவரது தந்தை ராஜனும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டியவர்களில் இல்லங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீடு, டி.என்.புதூரில் உள்ள அவரது தந்தை ராஜனின் வீடு, இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை பங்குதாரராக இருந்த கே.சி.பி.இன்ஜினியர்ஸ் அலுவலகம் ஆகிய இடங்களில் ஐடி சோதனை நடைபெற்றது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ஐடி ரெய்டில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது சந்திரசேகர் நகராட்சி, மாநகராட்சி மற்றும் கோவை ஸ்மார்ட் திட்டங்களில் ஒப்பந்தம் எடுத்துள்ளார். அதுகுறித்த ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க , பிரபல அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை. இவர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள அனந்தபுரி நகரில் வசித்து வருகிறார். இவரது இல்லம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு வரை நடைபெற்றது. கடந்த 2018ஆம் ஆண்டே இவரது இல்லங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. அப்போது அவரது இல்லத்தில் இருந்து 170 கோடி ரூபாய் ரொக்கப்பணமாகவும், 150 கிலோ தங்கமும் கைப்பற்றபட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் வேண்டியவர் என்பதால் அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனை நடைபெற்று வருகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் சோதனை தொடர்பாக அவரது மகன்களான கருப்பசாமி, நாகராஜ், பாலசுப்பிரமணியன் மற்றும் ஈஸ்வரனிடம் ஐடி அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தியுள்ளனர்.
அவர்களது வாக்குமூலங்களையும் அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கட்டுப்பாட்டில் இருந்த நெடுஞ்சாலைத்துறையில் முக்கிய ஒப்பந்தங்களை எடுத்துள்ளதாக தெரிகிறது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தற்போதும் சில அரசு ஒப்பந்தங்களை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது முறையாக ஐடி ரெய்டு நடைபெற்றுள்ளதால், இதற்கும் தற்போதைய அரசியல் சூழலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இராமானுஜம்.கி








